
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்குபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் பஞ்சாப் மாநிலம் மொஹாலியிலும் 2-வது போட்டி கர்நாடகாவின் பெங்களூருவிலும் நடைபெற உள்ளது. நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கையை பந்தாடிய இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. எனவே இந்த டெஸ்ட் தொடரிலும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீண்டும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச இந்திய அணி:
இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 4 அதாவது நாளை காலை 9.30 மணிக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் துவங்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதற்காக இந்திய அணியினர் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னதாக கடந்த 2014 முதல் கேப்டனாக செயல்பட்டு 7வது இடத்தில் இருந்த இந்தியாவை தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர்-1 அணியாக ஜொலிக்க வைத்த விராட் கோலி கடந்த மாதம் திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
அவர் பொறுப்பேற்ற போது சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெறும் அணியாக இருந்த இந்தியாவை அதன்பின் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக உலகின் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறும் அணியாக மாற்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். மொத்தமாக 68 போட்டிகளில் 40 வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான கேப்டனாக விடை பெற்றுள்ளது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் தற்போதைய நிலைமையை சமாளிக்க புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய பயணத்தை இந்த இலங்கை தொடர் முதல் துவங்க உள்ளது. அந்த வகையில் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்க போகும் உத்தேச அணியை பற்றி விவாதிப்போம்.
1. ஓப்பனிங் : இந்திய டெஸ்ட் அணியின் முதல் தொடக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் 2வது தொடக்க வீரராக இருந்த கேஎல் ராகுல் காயத்தால் விலகியதை அடுத்து மயங்க் அகர்வால் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. மிடில் ஆர்டர் : கடந்த 10 வருடங்களாக இந்திய மிடில் ஆர்டரில் தூண்களாக இடம் பிடித்து வந்த அனுபவம் நட்சத்திரங்கள் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் மோசமான பாரம் காரணமாக நீண்ட நாட்களுக்கு பின் இந்த தொடரில் நீக்கப்பட்டுள்ளார்கள். எனவே இந்த இலங்கை தொடர் முதல் இந்திய மிடில் ஆர்டரில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு இளம் வீரர்கள் வாய்ப்பு பெற உள்ளார்கள்.
அந்த வகையில் புஜாரா விளையாடிய 3வது இடத்தில் காயத்தில் இருந்து திரும்பியுள்ள இளம் வீரர் சுப்மன் கில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் இவர் ஓபனிங் இடத்தில் விளையாடிய போதிலும் இம்முறை இவரை மிடில் ஆர்டரில் சோதித்து பார்க்க விரும்புவதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். அதேபோல் கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த கான்பூர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி சதம் மற்றும் அரைசதம் அடித்து சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்த இடத்தில் விளையாட வாய்ப்பு உள்ளது.
4வது எந்தவித சந்தேகமும் இன்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்குவார். குறிப்பாக அவர் தனது 100வது போட்டியில் களமிறங்கி சாதனை படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 5வது இடத்தில் இதுவரை விளையாடி வந்த ரகானே நீக்கப்பட்டதை அடுத்து நீண்ட காலமாக தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வந்த ஹனுமா விஹாரி ஒரு வழியாக நிரந்தர வாய்ப்பு பெறுவார் என நம்பப்படுகிறது. மேலும் 6வது இடத்தில் ரிஷப் பண்ட் வழக்கம் போல விளையாட உள்ளார்.
3. ஆல் ரவுண்டர்கள்:
கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்த அணிக்கு திரும்பியுள்ளதால் முதல் ஆல்-ரவுண்டராக அவர் விளையாடுவார். அவருடன் மற்றொரு சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக காயத்திலிருந்து அஸ்வின் குணமடைந்தால் மட்டுமே விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் கொடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. ஒருவேளை அவர் முழுமையாக குணமடையவில்லை எனில் ஜெயந்த் யாதவ் விளையாடுவார் என நம்பலாம்.
இதையும் படிங்க : இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் : மொஹாலி மைதானம் எப்படி, வரலாற்று புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ
4. வேகப்பந்து வீச்சாளர்கள்: முகமது சமி, முகம்மது சிராஜ் மற்றும் துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அடங்கிய உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி இந்த போட்டியில் களமிறங்க உள்ளது.
இலங்கை முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), மயங் அகர்வால், சுப்மன் கில்/ஷ்ரேயஸ் ஐயர், விராட் கோலி, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின்/ஜெயந் யாதவ், முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.