
சார்ஜாவில் 2024 அண்டர் 19 ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. அதில் நவம்பர் நான்காம் தேதி நடைபெற்ற குரூப் ஏ பிரிவின் ஒரு லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதை அடுத்து களமிறங்கிய அந்த அணி தடுமாற்றமாக விளையாடியது.
இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சில் கடைசி வரை அதிரடியாக விளையாட முடியாத அந்த அணி 44 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ராயன் கான் 35, அக்சத் ராய் 26 ரன்கள் எடுத்தார்கள். இந்தியா அண்டர் 19 அணிக்கு அதிகபட்சமாக யுதாஜித் குஹா 3, சேட்டன் சர்மா 2, ஹர்திக் ராஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அந்த இன்னிங்ஸில் அமீரக பேட்ஸ்மேன் அடித்த ஒரு பவுண்டரியை இந்திய வீரர் தடுத்து விக்கெட் கீப்பரை நோக்கி எறிந்தார். அதை முன்னோக்கி சென்று பிடித்த விக்கெட் கீப்பர் ஹர்வன்ஸ் சிங் ஜாம்பவான் எம்எஸ் தோனியை போல திரும்பி பார்க்காமலேயே ஸ்டம்பை நோக்கி சரியாக அடித்தார். இருப்பினும் எதிரணி பேட்ஸ்மேன் வெள்ளைக் கோட்டுக்குள் வந்ததால் அது அவுட்டில்லை என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த இடத்தில் தோனியை போல் ஹர்வன்ஸ் செயல்பட்டதாக நேரலையில் வர்ணனையாளர்கள் பாராட்டினார்கள். அதைத்தொடர்ந்து 138 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்சி மற்றும் ஆயுஸ் மாத்ரே ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். அதற்கு தகுந்தார் போல் அமீரக பவுலர்கள் சுமாராக பந்து வீசினார்கள்.
அதை பயன்படுத்தி வெளுத்து வாங்கிய அந்த ஜோடி 16.1 ஓவரில் 143-0 ரன்கள் எடுத்து இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. அதில் ஆயுஸ் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 67* (51) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய சூரியவன்சி 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 76* (46) ரன்கள் அடித்தார். குறிப்பாக தோனியை போல அவர் 16.1வது பந்தில் போட்டியை அவர் சிக்ஸருடன் ஃபினிஷிங் செய்தார்.
இதையும் படிங்க: இந்தியா 36க்கு அவுட்டான அடிலெய்ட் பிட்ச் இம்முறை எப்படி இருக்கும்? மைதான பராமரிப்பாளர் பேட்டி
வெறும் 13 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிவேகமான சதத்தை அடித்து சாதனை படைத்தார். அதனால் அவரை 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் கிரிக்கெட் அணி ராகுல் டிராவிட் பரிந்துரையுடன் 1.10 கோடிக்கு வாங்கியது. ஆனால் அதன் பின் சில போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடிய அவர் இப்போட்டியில் ராகுல் டிராவிட் குறி தப்பவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அசத்தியது குறிப்பிடத்தக்கது.