370 ரன்ஸ்.. வரலாறு காணாத டபுள் சாதனை பார்ட்னர்ஷிப்.. அயர்லாந்தை விளாசிய இந்தியா அபார வெற்றி

IND vs IRE
- Advertisement -

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய மகளிரணி தங்களுடைய சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் இரண்டாவது போட்டி ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்றது. ராஜ்கோட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். பவர் பிளே ஓவர்களில் அபாரமாக பேட்டிங் செய்த அந்த ஜோடி 19 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்தது.

- Advertisement -

டபுள் பார்ட்னர்ஷிப்:

அதில் மந்தனா 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 73 (54) ரன்களும் ராவல் அரை சதத்தை அடித்து 67 ரன்களும் விளாசி பெவிலியன் திரும்பினார்கள். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஹர்லின் தியோல் – ஜெமிமா ரோட்ரிகஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து அயர்லாந்தை வெளுத்து வாங்கினார்கள். மிடில் ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த ஜோடியும் 3வது விக்கெட்டுக்கு 183 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள்.

இதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா ஒரே போட்டியில் இரண்டு 150+ ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்து வரலாற்றில் காணாத சாதனையை பதிவு செய்தது. அந்தளவுக்கு அசத்திய அந்த ஜோடியில் தியோல் அரை சதத்தை அடித்து 89 ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெமிமா முதல் முறையாக சதத்தை அடித்து 102 (91) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

அவர்களுடைய அபாரமான ஆட்டத்தால் 50 ஓவரில் இந்தியா 370-5 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா தங்களின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2017ஆம் ஆண்டு இதே அயர்லாந்துக்கு எதிராக இந்தியா 358-2 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியாவை தாண்டி அக்சர் படேலுக்கு துணை கேப்டன் பதவி வழங்க இதுவே காரணம் – விவரம் இதோ

பின்னர் 371 ரன்களை துரத்திய அயர்லாந்து முடிந்தளவுக்கு போராடியும் 254-7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கோல்டர் ரெய்லி 80 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 116 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ளது.

Advertisement