
இந்திய ஏ அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 16ஆம் தேதி லக்னோவில் இருக்கும் அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி இந்திய பவுலர்களை அபாரமாக எதிர்கொண்டு 532/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அந்த அணிக்கு 198 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேம்பல் கெல்லாவே 88 ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து அசத்திய சாம் கோன்ஸ்டஸ் சதத்தை அடித்து 109 (144) ரன்கள் குவிததார்.
அதே போல மிடில் ஆர்டரில் கூப்பர் கோன்லி 70, லியன் ஸ்காட் 81 ரன்கள் எடுத்தனர். அவர்களை விட 18 பவுண்டரி 4 சிக்ஸருடன் அதிரடியாக விளையாடிய பிலிப் சதத்தை அடித்து 123* (87) ரன்கள், சேவியர் பார்லெட் 39* (24) ரன்கள் எடுத்தனர். மறுபுறம் சுமாராகவே பவுலிங் செய்த இந்திய ஏ அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷ் துபே 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அடுத்து விளையாடிய இந்தியா ஏ அணிக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அபிமன்யு ஈஸ்வரன் 44 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவருடன் இணைந்து விளையாடிய தமிழக வீரர் ஜெகதீசனுடன் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் சாய் சுதர்சன் இணைந்தார். 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ஜெகதீசன் அரை சதத்தை அடித்து 64 ரன்கள் குவித்து அவுட்டானார்.
அடுத்ததாக தேவதூத் படிக்கல் தம்முடைய பங்கிற்கு நங்கூரமாக விளையாடினார். அவருடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சுதர்சன் அரை சதத்தை அடித்து 73 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களில் அவுட்டான போதிலும் துருவ் ஜுரேல் சற்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க:அடுத்த மேட்ச்லயும் பாகிஸ்தான் அணிக்கு அதே ட்ரீட்மென்ட் தான்.. சூரியகுமார் யாதவ் இதைத்தான் செய்வார் – விவரம் இதோ
இந்தப் பக்கம் அரை சதம் கடந்த படிக்கலுடன் சேர்ந்து அசத்திய ஜுரேல் தம்முடைய பங்கிற்கு ஆஸ்திரேலிய பவுலர்களை அபாரமாக எதிர்கொண்டார். தொடர்ந்து அசத்திய அவர் சதத்தை அடித்து 3வது நாள் ஆட்டநேரம் முடிவில் 113* (132) ரன்கள் எடுத்துள்ளார். அவருடன் களத்தில் படிக்கல் 86* ரன்கள் எடுத்திருக்கும் நிலையில் இந்தியா ஏ அணி 403/4 ரன்களை குவித்துள்ளது. இன்னும் 129 ரன்கள் பின்தங்கியுள்ள இந்திய அணி 4வது நாளிலும் ஆஸ்திரேலியாவை அடித்து முன்னிலை பெற முயற்சிக்கவுள்ளது.