14வது ஐபிஎல் சீசனுக்கான அனைத்து பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தேவையற்ற வீரர்களை வெளியேற்றி உள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் மினி ஏலம் மூலம் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து விலைக்கு வாங்கியுள்ளது. அந்த வகையில் சி.எஸ்.கே அணியும் சில வீரர்களை ஏலத்தில் வாங்கி கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாகிர் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்தார். இம்ரான் தாகிர் அணியில் இடம் பெற்ற அந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த சீசனில் இம்ரான் தாகிர் தனது அதிரடி பந்து வீச்சின் மூலம் 26 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
இதனால் இம்ரான் தாகிர் பர்ப்பிள் தொப்பியை பெற்றார். இதையடுத்து கடந்த 13வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸில் இம்ரான் தாகிர் வெறும் மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடினார். தற்போது தாஹிரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தன்னை அணியில் தக்கவைத்தது குறித்து இம்ரான் தாகிர் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில் :
“தோனியுடன் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறோம். தோனி தலை சிறந்த வீரர். கிரிக்கெட்டில் அனைத்து வகையான நுணுக்கங்களையும் கற்று இருக்கிறார். அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் தோனியை பிடிக்கும்.
உலக அளவில் தோனி தான் சிறந்த கிரிக்கெட் வீரர். நாங்கள் பந்துவீசும் போது எங்களுக்கு ஏற்றவாறு பீல்டர்களை தோனியே சரி செய்வார். தோனியிடம் இருந்து நான் பலவற்றை கற்றுக் கொண்டேன். கடந்த சீசனில் நான் மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடினேன். இதற்காக நான் கவலைப்படவில்லை. இந்த சீசனில் சிறப்பாகப் விளையாடுவேன்” என்று இம்ரான் தாகிர் பேசியிருக்கிறார்.