பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. கடைசியாக கடந்த 1998 ஆம் ஆண்டு மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. அதற்கடுத்து இம்முறை தான் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதித்துள்ளது.

அதன்பின் 24 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு செல்லாமல் இருந்து வந்த ஆஸ்திரேலியா ஒரு வழியாக இந்த வருடம் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. 24 வருடங்கள் கழித்து முதல் முறையாக பாகிஸ்தானில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளதால் இந்த தொடர் உலகம் முழுவதிலுமுள்ள ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய ஆஸி தொடர்:
அது மட்டுமல்லாமல் கடந்த வருடம் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதாக இருந்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணி போட்டி துவங்க ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக திடீரென அந்த தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் விளையாட விரும்பவில்லை என நியூசிலாந்து தெரிவித்த அதே காரணத்தை சுட்டிக்காட்டி அதற்கு அடுத்த ஒரு சில வாரங்களில் தாங்கள் பங்கேற்க இருந்த கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது.

ஏற்கனவே பல வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட யோசித்து வரும் நிலையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களின் அந்த செயலால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் 24 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது அந்நாட்டைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
முக்கிய வீரர்கள் புறக்கணிப்பு:
இதில் வரும் மார்ச் 4, 12, 21 ஆகிய தேதிகளில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மார்ச் 29, 31 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப் பயணத்தின் கடைசி போட்டியாக வரும் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெறும் ஒரு டி20 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த முக்கிய சுற்றுப்பயணத்தில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க ஆரோன் பின்ச் தலைமையிலான 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியப்படும் வண்ணமாக பட் கமின்ஸ், டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல் போன்ற முக்கிய நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர்கள் சேர்க்கப்படவில்லை.
ஐபிஎல் தொடருக்காக:
இருப்பினும் இந்த ஒருநாள் தொடருக்கு முன்பாக மார்ச் 4, 12, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பட் கமின்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். இதில் கிளென் மேக்ஸ்வெல் தனது திருமணத்தை முன்னிட்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் நடக்கும் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளதால் அதில் முங்கூட்டியே பங்கேற்பதற்காக டேவிட் வார்னர் போன்ற ஒருசில ஆஸ்திரேலிய வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார்கள்.

தற்போது அதை ஏற்றுக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டேவிட் வார்னர் போன்ற ஒரு சில வீரர்களுக்கு பாகிஸ்தான் வெள்ளை பந்து தொடரிலிருந்து விடுப்பு அளித்துள்ளது. இருப்பினும் சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன், ஆடம் சாம்பா போன்ற முக்கியமான ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடாத காரணத்தால் பாகிஸ்தான் தொடரில் விளையாட உள்ளார்கள்.
அதேசமயம் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் மிட்செல் ஸ்டார்க், நேதன் லையன் போன்ற ஒரு சில முக்கிய வீரர்களுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பட் கம்மின்ஸ், டேவிட் வார்னர் போன்ற ஒரு சில முக்கியமான நட்சத்திர வீரர்கள் எந்தவித தடையுமின்றி பங்கேற்பது உறுதியாகியுள்ளதால் ஐபிஎல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
இதையும் படிங்க : வீடியோ : கேட்ச்சை கோட்டை விட்டதால் சக வீரரை கன்னத்தில் அறைந்த பாக் வீரர் – என்ன நடந்தது?
மறுபுறம் ஏற்கனவே இந்தியா மற்றும் ஐபிஎல் தொடர் மீது கடுப்பில் உள்ள பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்த செய்தி மேலும் எரிச்சலை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



