2023 உ.கோ தொடரில் இந்தியாவை தோற்கடிக்கும் மேஜிக் பற்றி 2010லேயே பேசுனோம், ஸ்கெட்ச் தயார் – பாக் வீரர் பேட்டி

Imam Ul Haq
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கப் போகும் 2023 ஐசிசி உலக கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அந்தத் தொடரில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு நிகராக அக்டோபர் 15ஆம் தேதி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்த்து உலகம் முழுவதிலும் காணப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் எல்லை பிரச்சனை காரணமாக ஏற்கனவே இவ்விரு நாடுகளும் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன. அதை விட 1992 முதல் இதுவரை நடைபெற்ற அனைத்து 50 ஓவர் உலகக் கோப்பைகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள இந்தியா ஒருமுறை கூட தோற்காமல் தொடர்ந்து 7 போட்டிகளிலும் வென்று வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே அந்த கௌரவத்தை சொந்த மண்ணில் காப்பாற்ற வேண்டிய நிலைமையில் இந்தியா களமிறங்க உள்ளது.

ஸ்கெட்ச் தயார்:
மறுபுறம் 30 வருடங்களாக சந்தித்து வரும் தோல்விகளுக்கு இம்முறை அதன் சொந்த மண்ணிலேயே இந்தியாவை பழி தீர்க்க பாகிஸ்தானும் தயாராகி வருகிறது. குறிப்பாக உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்த போட்டியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து மோசமான வரலாற்றை நிறுத்த வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் எதிர்கொண்டு வீழ்த்துவதை பற்றி 2010 காலகட்டங்களிலேயே பாபர் அசாமுடன் விவாதித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம்-உல்-ஹக் கூறியுள்ளார்.

imam

மேலும் சமீப காலங்களில் 330 – 350 ரன்கள் இலக்கை கூட எளிதாக சேசிங் செய்து வரும் தங்களுடைய அணி இந்திய மண்ணில் மேஜிக் நிகழ்த்தி இந்தியாவை தோற்கடிப்பதுடன் இந்த உலகக் கோப்பையையும் வெல்வதற்கான திட்டங்களை தயார் செய்துள்ளதாக கூறும் அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “இந்திய மண்ணில் குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக விளையாடி ஏதாவது வித்தியாசமான மேஜிக் நிகழ்த்தி வெற்றி காண்பதை பற்றி நானும் பாபர் அசாமும் 2010க்கு முன்பே விவாதித்துள்ளோம். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் எங்களுடைய அணி மிகவும் போட்டியை கொடுக்கக்கூடிய சமநிலை கொண்ட அணியாக இருக்கிறது”

- Advertisement -

“குறிப்பாக 2019 போலவே எங்களுடைய அணியின் கலவை சிறப்பாக இருக்கிறது. அதில் வாய்ப்புகளை பெறும் வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் 350 ரன்களை சேசிங் செய்துள்ளோம். அதே போல தென் ஆப்பிரிக்காவில் 330 ரன்களை அடித்த நாங்கள் அங்கே தொடரையும் வென்றுள்ளோம். எனவே இந்த போட்டிக்காக அனைவரும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம். அதே சமயம் சற்று பதற்றமும் இருக்கிறது என்பதை நான் மறுக்க விரும்பவில்லை”

Imam-1

“தற்போதைய பாகிஸ்தான் அணி ஆச்சரியங்களை நிகழ்த்தும் அளவுக்கு பலமானதாக இருக்கிறது. எனவே இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையை வென்றால் அது எங்களுடைய நாட்டுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். மேலும் 2019இல் இருந்ததை விட தற்போது நான் சிறந்த வீரராக மாறியுள்ளதை கண்ணாடியில் பார்க்கும் போது தெரிவதாக நம்புகிறேன்”

இதையும் படிங்க:2023 உ.கோ தொடரில் அஸ்வின மட்டும் எடுத்துறாதீங்க, அந்த 2 ஸ்பின்னர்கள் தான் பெஸ்ட் – சஞ்சய் மஞ்ரேக்கர் கூறும் காரணம் என்ன

“முன்பை விட தற்போது வயதிலும் அனுபவத்திலும் நான் முதிர்ச்சியடைந்துள்ளேன். எனவே சீனியராக எனக்கு பொறுப்புகள் இருக்கிறது. அதனால் சில வித்தியாசமான ஷாட்களை நான் அடிக்க பயிற்சிகளை எடுத்துள்ளேன். மொத்தத்தில் கடந்த 4 வருடங்களில் என்னுடைய செயல்பாடுகள் நல்ல உச்சத்தை எட்டியுள்ளது. அதை நான் இந்த உலகக் கோப்பையிலும் தொடர விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement