- Advertisement -
டிஎன்பிஎல்

TNPL 2023 : ஒற்றை ஆளாக பந்து வீச்சிலேயே நெல்லையை சுருட்டி வீசிய இளம் வீரர் – திருப்பூர் முதல் வெற்றி பெற்றது எப்படி?

தமிழகத்தில் நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் ஜூன் 20ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் இருக்கும் என்பிஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற 10வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நெல்லைக்கு ஸ்ரீ நிரஞ்சன் 13 (8) சூரிய பிரகாஷ் 10 (9) என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே புவனேஸ்வரன் வேகத்தில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதை விட சவாலான பிட்ச்சில் அடுத்து வந்த அருண்குமார் 2 (5), அருண் கார்த்திக் 4 (2), லக்சய் ஜெயின் 8 (24) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் திருப்பூரின் தரமான பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தினர். அதனால் 49/5 என சரிந்த அந்த அணியை அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரித்திக் ஈஸ்வரன் 15 (8) ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் சோனு யாதவ் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (32) ரன்களில் ரன் அவுட்டாகி திரும்பினார்.

- Advertisement -

அசத்தல் பவுலிங்:
கடைசி நேரத்தில் கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய அஜித்தேஷ் குருசாமி 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20 (14) ரன்கள் எடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி நெல்லையை 18.2 ஓவரில் 124 ரன்களுக்கு சுருட்டிய திருப்பூர் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக இளம் வீரர் பி புவனேஸ்வரன் 3.2 ஓவரில் வெறும் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து கிட்டத்தட்ட ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தார்.

அதைத்தொடர்ந்து 125 என்று சுலபமான இலக்கை துரத்திய திருப்பூருக்கு 8.3 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 73 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த எஸ் ராதாகிருஷ்ணன் 5 பவுண்டரியுடன் 34 (30) ரன்களில் அவுட்டாகி சென்றார். அவருடன் மறுபுறம் அசத்திய துஷார் ரஹீஜா அவரை விட சற்று அதிரடியாக செயல்பட்டு விரைவாக ரன்களை சேர்த்து அரை சதத்தை நெருங்கிய போது 4 பவுண்டரி 3 சிக்சருடன் 49 (43) ரன்களில் ஏமாற்றத்துடன் அவுட்டானார்.

- Advertisement -

இருப்பினும் அந்த நல்ல தொடக்கத்தை வீணடிக்காமல் அடுத்து வந்த ராஜேந்திரன் விவேக் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 21 (13) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அதனால் கடைசியில் பாலச்சந்தர் அனிருத் 15* (10) ரன்களும் எஸ் கணேஷ் 3* (5) ரன்களும் எடுத்த உதவியுடன் 18.2 ஓவரிலேயே 128 ரன்கள் எடுத்த திருப்பூர் 7 விக்கெட் வித்தியாசத்தில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் சவாலான பிட்ச்சில் சராசரியான ஸ்கோரை எடுக்க தவறிய நெல்லைக்கு அதிகபட்சமாக சோனு யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை எடுத்த புவனேஸ்வரன் சந்தேகமின்றி ஆட்டநாயக்கன் விருதை தட்டி சென்றார். அந்த வகையில் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 தோல்விகளுக்கு பின் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்த திருப்பூர் புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

இதையும் படிங்க:Ashes 2023 : போராடி சாதித்த கவாஜா, 43 வருடங்களுக்கு பின் தனித்துவமான சாதனை – ரவி சாஸ்திரி, புஜாரா உலக சாதனை சமன்

மறுபுறம் 3 போட்டிகளில் 2 தொடர் வெற்றிகளுக்கு பின் முதல் தோல்வியை சந்தித்துள்ள நெல்லை 4 புள்ளிகளை கொண்டிருந்தும் ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் 3 இடங்களில் அதே 4 புள்ளிகளுடன் முறையே திண்டுக்கல் டிராகன்ஸ் கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் ஆகிய அணிகள் இருப்பதால் இத்தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல கடுமையான போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by