குறைக்கும் நாய்களுக்கு – தன் மீதான விமர்சனங்களுக்கு ஜஸ்பிரித் பும்ரா கொடுத்த பதிலடி இதோ

Jasprit Bumrah
- Advertisement -

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் இன்னும் 10 நாட்களில் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இத்தொடரில் நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட டாப் 16 அணிகள் கோப்பையை வெல்ல களமிறங்குகின்றன. இந்த தொடரில் 2007க்குப்பின் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற கனவுடன் களமிறங்கும் இந்தியாவுக்கு ஆரம்பத்திலே மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் நம்பிக்கை நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆரம்பத்திலேயே காயத்தால் விலகிய நிலையில் கடைசி நேரத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியுள்ளார்.

முன்னதாக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர்-1 டி20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்றது. அதில் கடைசிக்கட்ட ஓவரில் புவனேஸ்வர் குமார் போன்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது தோல்வியை கொடுத்த நிலையில் உலக கோப்பையில் பும்ரா காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் காயத்திலிருந்து குணமடைந்து ஆஸ்திரேலிய டி20 தொடரில் பங்கேற்ற அவர் தென்ஆப்பிரிக்கா டி20 தொடருக்கான வலைப்பயிற்சியில் முதுகுப்புறத்தில் காயத்தை சந்தித்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளார்.

- Advertisement -

குறைக்கும் நாய்கள்:
கடந்த 2016இல் அறிமுகமாகி அடுத்த சில வருடங்களிலேயே 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான பௌலிங் ஆக்சனால் எதிரணிகளை திணறடித்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து பந்துவீச்சு துறையின் முதுகெலும்பாக உருவெடுத்த அவர் டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே முதல் டெத் ஓவர்கள் வரை போட்டியின் அனைத்து சூழ்நிலைகளிலும் கச்சிதமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றி இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக பார்க்கப்படுகிறார். மறுபுறம் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோர் 130 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசக் கூடியவர்கள் என்பதுடன் கடைசிக்கட்ட ஓவரில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர்.

அதனால் இம்முறை இந்தியாவின் உலகக்கோப்பை கனவு ஆரம்பத்திலேயே தகர்ந்து விட்டதாக நிறைய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் இப்படி ஒரு நிலைமை வந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த வருடம் இந்தியா பங்கேற்ற பெரும்பாலான டி20 தொடர்களில் ஓய்வெடுத்த பும்ரா அதையும் தாண்டி கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ளதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் இவர் ஐபிஎல் தொடரில் மும்பைக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் ஆனால் நாட்டுக்காக ஓய்வெடுத்து முக்கிய நேரத்தில் காயமடைந்து வெளியேறி விடுவார் என்று ஆதாரங்களுடன் விமர்சித்தனர்.

- Advertisement -

இருப்பினும் யாராவது நாட்டுக்காக உலக கோப்பை போன்ற தொடரில் வேண்டுமென்றே காயமடைந்து வெளியேறுவார்களா? என்று சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவையும் கொடுத்தனர். இந்நிலையில் இதுபோன்ற தேவையற்ற விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜஸ்பிரித் பும்ரா மறைமுகமாக கொடுத்த பதிலடியில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “உங்களை பார்த்து குறைக்கும் ஒவ்வொரு நாய்க்கும் நீங்கள் கவனம் கொடுத்து நின்று அதன் மீது கல்லை தூக்கி எறிந்து கொண்டிருந்தால் உங்களால் எப்போதும் உங்களுடைய லட்சிய இலக்கைத் தொட முடியாது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக காயத்திலிருந்து வெளியேறினாலும் இந்திய அணிக்கு எப்போதும் தம்முடைய ஆதரவு உண்டு என தெரிவித்த அவர் டுவிட்டரில் பதிவிட்டது பின்வருமாறு. “இந்த டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக நான் இருக்க மாட்டேன் என்பதில் வருத்தமடைகிறேன். ஆனால் எனது காயத்துக்காக எனது அன்புக்குரியவர்களிடமிருந்து நான் பெற்ற வாழ்த்துக்கள், அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. இங்கே குணமடைந்து கொண்டிருக்கும் நான் ஆஸ்திரேலியாவில் நம்முடைய அணியை உற்சாகப் படுத்துவேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs RSA : முதல் ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் – கேன்சலாகவும் வாய்ப்பு

தற்போது முதுகுப் பகுதியில் எலும்பு முறிவை சந்தித்துள்ளார் என்பதால் காயத்திலிருந்து குணமடைய 6 மாதங்கள் தேவைப்படும் என்று செய்திகள் வெளியானாலும் இதுவரை ஜஸ்பிரித் பும்ராவின் முழுமையான காயம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஒருவேளை ஏற்கனவே வெளியான செய்திகள் உண்மையாகும் பட்சத்தில் அதிலிருந்து குணமடைந்து அடுத்ததாக 6 மாதங்கள் கழித்து வரும் மார்ச், ஏப்ரல் மாதம் துவங்கும் ஐபிஎல் 2023 தொடரில் மட்டுமே அவரால் களமிறங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement