விராட் கோலி தலைமையில் நான் ஆடியிருந்தா 3 உலககோப்பை வாங்கியிருப்போம் – இந்திய வீரரின் உருட்டு

Kohli
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2019க்கு பின்பு 3 வகையான கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதற்கு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று முடிந்த 3 வகையான கிரிக்கெட் தொடர்களிலும் சதமடித்து முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சொதப்பிய அவர் ஏமாற்றத்தையே கொடுத்தார். கடந்த பல வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் 70 சதங்களையும் ஏராளமான ரன்களையும் விளாசி நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக நிரூபித்துள்ள அவர் தன்னுடைய பார்மை மீட்டெடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

kohli

- Advertisement -

ஆனால் சூப்பர்ஸ்டார் வீரர் என்பதற்கு ஏற்றார்போல் செயல்படாமல் எத்தனை நாட்கள் சுமாராக செயல்படுவீர்கள் என்று விமர்சிக்கும் கபில் தேவ் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் அவரை அணியிலிருந்து நீக்குமாறு கேட்க தொடங்கியுள்ளனர். இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்து ஏற்கனவே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ள அவருக்கு கெவின் பீட்டர்சன், கிராம் ஸ்வான், சோயப் அக்தர் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

கேப்டன்ஷிப் பாதிப்பு:
முன்னதாக 2014இல் கேப்டனாக பொறுப்பேற்ற போது தர வரிசையில் 7-வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தனது ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக தரம் உயர்த்தி ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வரலாற்று வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் 2017 முதல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் சிறந்த கேப்டனாக செயல்பட்டு வந்தார். இருப்பினும் உலக கோப்பையை வாங்கி தரவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து அவர் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க கடந்த 2021 டி20 உலகக் கோப்பையுடன் 20 ஓவர் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்வதாக அறிவித்தார்.

kohli

அதை பயன்படுத்திய பிசிசிஐ வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்று கருத்துடன் அவரை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியது. அதனால் மனமுடைந்த அவர் பணிச்சுமை என்பதை காரணம் காட்டி வெற்றிகரமான ஆசிய கேப்டனாக இருந்த போதிலும் டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார். மொத்தத்தில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் பறி போவதற்கு உலக கோப்பை வாங்கி தராதது முக்கியக் காரணமாக அமைந்தது.

- Advertisement -

3 உலககோப்பைகள்:
இந்நிலையில் விராட் கோலி தலைமையில் தாம் விளையாடியிருந்தால் 2015, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலக கோப்பைகளை இந்தியா வென்றிருக்கும் என்று கேரளாவைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் எம்எஸ் தோனி தலைமையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய அவர் 2013இல் ஐபிஎல் தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றார். அதை நீதிமன்றம் சென்று எதிர்த்து வழக்காடி வென்று தடையிலிருந்து மீண்ட அவர் வயது காரணமாக சமீபத்தில் ஓய்வு பெற்றார். அந்த நிலையில் இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

Sreesanth MS Dhoni

“விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் நான் விளையாடியிருந்தால் இந்தியா 2015, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பைகளை வென்றிருக்கும். விளையாடும்போது காட்சிப்படுத்துவது முக்கியம் என்பதுடன் சிறிய பகுதிகள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. மாறாக முக்கிய தருணங்களில் கவனச் சிதறல்களை ஏற்பட விடாமல் வெற்றிக்கான தந்திரங்களை கற்றுக் கொள்வது முக்கியமாகும்.

- Advertisement -

அந்த வகையில் டென்னிஸ் பந்துகளில் எப்படி யார்க்கர் வீச வேண்டும் என்பதை என்னுடைய பயிற்சியாளர் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார். அதை பும்ராவிடம் கேட்டால் அது எளிதென்றே சொல்வார்” என்று கூறினார். 2007 டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான அரையிறுதிப் போட்டியில் அந்த அணியின் மேத்யூ ஹெய்டன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய தொடக்க வீரர்கள் சரவெடியாக பேட்டிங் செய்தபோது நெருப்பாக பந்துவீசிய ஸ்ரீசாந்த் அவர்களை கிளீன் போல்டாக்கி பின்னர் இறுதிப்போட்டியில் மிஸ்பா கொடுத்த கேட்ச்சை கச்சிதமாக பிடித்து இந்தியா உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியதை ரசிகர்கள் மறக்க முடியாது.

Sreesanth 1

அந்த அளவுக்கு திறமை வாய்ந்த அவர் விராட் கோலி தலைமையில் விளையாடியிருந்தால் முக்கியமான நேரத்தில் யார்கர் பந்துகளை ஆயுதமாக பயன்படுத்தி உலக கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி இருப்பேன் என்று கூறியுள்ளார். அதற்காக 3 உலக கோப்பைகளை வென்று தந்திருக்க முடியும் என்று கூறும் அவரின் கருத்து பல இந்திய ரசிகர்களுக்கே சற்று அதிகப்படியானதாக இருக்கிறது.

இதையும் படிங்க : 3 வகையிலும் ஆல்-டைம் சிறந்த வீரராக வருவார் – கடைசி போட்டிக்கு முன்பாக இந்திய வீரரை பாராட்டிய பென் ஸ்டோக்ஸ்

மேலும் 2015இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பையில் எம்எஸ் தோனி கேப்டனாக செயல்பட்டாரே தவிர விராட் கோலி செயல்படவில்லை என்பதையும் அவர் நினைவில் வைத்துக்கொள்ள தவறி விட்டாரா என்று அவருக்கு ரசிகர்கள் பதில் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement