ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் கனவுடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது. அதற்காக அமெரிக்கா பயணித்துள்ள இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. அப்போட்டி ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நாஸாவ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, பும்ரா போன்ற தரமான வீரர்கள் நிறைந்திருக்கின்றனர்.
இந்தியா – அயர்லாந்து:
எனவே தரவரிசையிலும் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா இப்போட்டியில் அயர்லாந்து வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபுறம் பால் ஸ்டர்லிங் தலைமையிலான அயர்லாந்து சமீபத்தில் பாகிஸ்தானை ஒரு போட்டியில் வீழ்த்தி திறமையுடைய அணியாகவே இருக்கிறது. அதனால் இப்போட்டியில் இந்தியாவுக்கு முடிந்தளவுக்கு சவாலை கொடுத்து வெற்றிக்காக போராட அயர்லாந்து தயாராகியுள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ளன. அந்த 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா வலுவான அணியாக ஜொலிக்கிறது. டி20 உலக கோப்பையிலும் (2009இல்) இதற்கு முன் விளையாடிய ஒரு போட்டியில் அயர்லாந்து அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த உலகக் கோப்பையின் போட்டிகள் நடைபெறுகிறது. அதனால் இந்த மைதானம் பிரத்தியேகமாக 3 – 4 மாதங்களில் புதிதாக கட்டப்பட்டு செயற்கையான பிட்ச் பொருத்தப்பட்டுள்ளது. அந்த மைதானத்தில் முதல் முறையாக நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அதில் இலங்கையை 77 ரன்களுக்கு சுருட்டிய தென்னாபிரிக்கா அதை சேசிங் செய்ய 16 ஓவர்கள் எடுத்துக்கொண்டது.
அந்த வகையில் நியூயார்க் மைதானத்தின் பிட்ச் பேட்டிங்க்கு சவாலாகவும் பவுலர்கள் ராஜாங்கம் நடத்தும் இடமாகவும் காணப்படுகிறது. எனவே இந்த போட்டியிலும் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதை சமாளித்து பேட்ஸ்மேன்கள் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த மைதானத்தில் 150 – 180 ரன்கள் என்பதே வெற்றிக்கு போராடுவதற்கு போதுமான ஸ்கோராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கவுதம் கம்பீர் எந்த அளவுக்கு ஒரு சோம்பேறி தெரியுமா? சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த – தினேஷ் கார்த்திக்
வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாளன்று நாஸாவ் நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. இருப்பினும் மேகமூட்டத்துடன் கொஞ்சம் காற்றடிக்கக்கூடிய சூழ்நிலை நிலவும் என்று தெரிய வருகிறது.



