இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திருந்தார். அவர் எடுத்த சில முடிவுகளின் மூலம் கொல்கத்தா அணிக்கு நன்மை கிடைத்ததோடு சேர்த்து மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றி அந்த அணி சாதனையை நிகழ்த்தி இருந்தது. இதன் காரணமாக கம்பீர் அடுத்த இந்திய தலைமை பயிற்சியாளராக வரவேண்டும் என்று பிசிசிஐ விருப்பப்பட்டது.
அதோடு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு பி.சி.சி.ஐ சார்பில் கௌதம் கம்பீருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் படி பேச்சு வார்த்தையும் நடந்ததாக கூறப்படுகிறது. அதோடு அந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சமீபத்தில் விளக்கம் அளித்திருந்த கம்பீர் :
நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன். தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தார். எனவே எதிர்வரும் டி20 உலக கோப்பையுடன் டிராவிட் தனது பதிவியிலிருந்து வெளியேற இருக்கும் வேளையில் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாற அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கௌதம் கம்பீர் ஒரு சோம்பேறியான வீரர் என முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் தெரிவித்திருக்கும் ஒரு கருத்து அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது : நான் பார்த்ததிலேயே மிகவும் சோம்பேறித்தனமான ஒரு விளையாட்டு வீரர் என்றால் அது கம்பீர்தான். அவர் எந்த ஒரு வேலையும் செய்ய மாட்டார். இதற்கு நான் ஒரு உதாரணத்தை சொல்கிறேன். ஒருமுறை இந்திய ஏ அணிக்காக நாங்கள் இருவரும் இணைந்து விளையாடிய போது எல்லோரும் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம்.
அப்போது ஹோட்டல் அறையில் படுத்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த கம்பீர் நான் அந்த வழியாக கடந்து செல்வதை பார்த்தார். அப்போது என்னை திடீரென உள்ளே அழைத்து பேச முற்பட்டார். நானும் ஏதோ முக்கியமான விடயம் சொல்லப்போகிறார் என்று நினைத்தேன். ஆனால் படுத்துக்கொண்டே இருந்த அவர் டிவி ரிமோட்டை எடுத்து சேனலை மாற்று என்று கூறினார். இதை கேட்டதும் எனக்கு ஷாக் ஆனது.
இதையும் படிங்க : விவாகரத்து பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஹார்டிக் பாண்டியாவின் மனைவி அதிரடி – என்ன ஆனது?
எப்படி விளையாட்டு துறையில் இருக்கும் ஒரு வீரர் இவ்வளவு சோம்பேறியாக இருக்கிறார் என்று நினைத்தேன். நான் அவரை அசிங்கப்படுத்துவேன் என்பதற்காக இதை சொல்லவில்லை. மனதில் இருந்த ஒரு விஷயத்தை தான் சொன்னேன் என்று கூறினார். இந்த உரையாடலின் போது கம்பீரும் அவர் அருகில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கார்த்திக் இந்த கருத்துக்களை எல்லாம் பேசும்போது கம்பீரும் சிரித்துக் கொண்டே அவரை பார்த்துக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



