இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதி வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் இந்த கோப்பையை தக்க வைத்துள்ளது. மறுபுறம் படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தக்க பதிலடி கொடுத்துள்ளது. அதனால் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்துள்ள அந்த அணி தங்களது நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்து ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.
முன்னதாக சுழலுக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்த்த கேப்டன் ரோகித் சர்மா 3வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஆனால் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே 4.8 டிகிரி அளவுக்கு தாறுமாறாக சுழன்ற இந்தூர் பிட்ச்சில் தாக்குப் பிடிக்க முடியாமல் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 109 ரன்களுக்கு சுருண்ட இந்தியா 2வது இன்னிங்சிலும் 163 ரன்களுக்கு சுருண்டு படு தோல்வியை சந்தித்தது.
ஐசிசி தண்டனை:
குறிப்பாக முதல் இன்னிங்ஸில் புஜாராவும் 2வது இன்னிங்ஸ் விராட் கோலியும் மோசமான பேட்டிங்கால் அவுட்டாகவில்லை. மாறாக திடீரென்று எதிர்பாராத வகையில் சுழன்று வந்த பந்துகளில் தான் அவுட்டானார்கள். பொதுவாக இந்தியாவில் சுழல் இருப்பது இயற்கை என்றாலும் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே இப்படி தாறுமாறாக சுழன்றது பல இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இருப்பினும் சொந்த மண்ணில் இந்த வகையான பிட்ச்சில் தான் விளையாட விரும்புவதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தது ரசிகர்களையும் மேலும் கடுப்பாக வைத்தது.
இந்நிலையில் முதல் மணி நேரத்திலேயே சுழன்ற இந்தூர் பிட்ச் மோசமாக இருந்தாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் அந்த பிட்ச் எப்படி இருந்தது என்பதை நன்று, சராசரி, சராசரிக்கும் குறைவு, மோசமானது, தகுதியற்றது என்று 5 பிரிவின் கீழ் அடிப்படையில் போட்டி நடுவர் மதிப்பிடுவார். அந்த வகையில் இப்போட்டியில் முதல் நாளின் முதல் ஓவரின் 5வது பந்திலேயே சுழல துவங்கிய இந்தூர் பிட்ச் மோசமாக இருந்ததாக இப்போட்டியில் நடுவராக செயல்பட்ட கிறிஸ் ப்ராட் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “இந்த பிட்ச் மிகவும் காய்ந்து பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமற்று இருந்தது. ஆரம்பத்திலிருந்தே சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. குறிப்பாக முதல் நாளின் முதல் ஓவரின் 5வது பந்திலேயே உடைய துவங்கி விட்டது. அதில் எந்த வேகமும் இல்லை. போட்டி முழுவதும் அதிகப்படியான சமமற்ற பவுன்ஸ் இருந்தது” என்று கூறியுள்ளார்.
The rating is in for the Indore pitch for the third #INDvAUS Test 👀#WTC23 | Details 👇 https://t.co/QgWYYxrNCR
— ICC (@ICC) March 3, 2023
Rohit Sharma after seeing the Indore pitch get a poor rating despite doing everything he could to defend the pitch
Indore pitch has received 3 demerit pts
The venue will get suspended to host international cricket for 12 months if it receives 2 more demerit pts in next 5 years pic.twitter.com/QHGidMHbqi
— Arnav Singh (@Arnavv43) March 3, 2023
அதை ஏற்றுக் கொண்டுள்ள ஐசிசி இந்தூர் பிட்ச் மோசம் என அறிவித்து அதற்கு தண்டனையாக 3 கருப்பு புள்ளிகளை கொடுத்துள்ளது. இந்த 3 கருப்பு புள்ளிகள் அடுத்த 5 வருடங்களுக்குள் 5 புள்ளிகளை தொடும் பட்சத்தில் இந்தூர் மைதானத்தில் 12 மாதங்கள் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு தாமாகவே ஐசிசி தடை விதிக்கும். கடைசியாக கடந்த 2022 பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் சராசரிக்கும் குறைவு என்ற ரேட்டிங் காரணமாக வெறும் ஒரு கருப்பு புள்ளியை மட்டுமே பெங்களூரு மைதானம் பெற்றது.
இதையும் படிங்க: IND vs AUS : அது ஒரு பந்து தான் நம்ம தோல்விக்கான காரணம், கூடவே மோசமான பேட்டிங் வேற – சுனில் கவாஸ்கர் காட்டம்
ஆனால் மோசம் என்ற ரேட்டிங் பெற்றுள்ளதால் இந்தூர் மைதானம் ஒரேடியாக 3 கருப்பு புள்ளிகளைப் பெற்று பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. கடைசியாக கடந்த 2017இல் இதே ஆஸ்திரேலியா இந்தியாவை 333 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்த போது புனே மைதானத்துக்கு இதே போல் மோசம் என்ற ரேட்டிங்கை ஐசிசி கொடுத்தது. அதன் பின் 5 வருடங்கள் கழித்து அப்படி ஒரு ரேட்டிங்கை ஐசிசி கொடுத்துள்ளது பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்துக்கு சவுக்கடியாக பார்க்கப்படுகிறது.