எங்களுக்கு எல்லாருமே ஒன்னு தான், ஆஸ்திரேலியா உட்பட இந்த வருடம் ஐசிசி தண்டனை வழங்கிய நாடுகளின் பட்டியல் இதோ

AUs vs IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் நெதர்லாந்திடம் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்துடன் வெளியேறிய தென்னாப்பிரிக்கா மீண்டும் அந்நாட்டிற்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. குறிப்பாக டிசம்பர் 17ஆம் தேதியன்று உலகப் புகழ் பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 6 விக்கெட் வித்யாசத்தில் தென்னாபிரிக்கா போராடி தோற்றது. அதை விட அப்போட்டி 2 நாட்களைக் கூட தொடாமல் வெறும் 142 ஓவரில் முடிந்தது உலக அளவில் விமர்சனங்களை எழுப்பியது.

பொதுவாகவே காபா மைதானம் என்ன தான் வேகத்துக்கு சாதகமாக இருந்தாலும் டெஸ்ட் போட்டிகள் என்றால் குறைந்தபட்சம் 3 நாட்களை தாண்டும். ஆனால் இம்முறை அமைக்கப்பட்டிருந்த பிட்சில் 5 மில்லி மீட்டர் அளவுக்கு பச்சை புற்கள் இருந்ததால் இரு நாடுகளைச் சேர்ந்த பவுலர்களும் பந்தில் அனலை தெறிக்க விட்டார்கள். மறுபுறம் அதை எதிர்கொள்ள முடியாமல் இரு நாடுகளை சேர்ந்த தரமான பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

- Advertisement -

ஐசிசி அதிரடி:
சொல்லப்போனால் முதல் நாளிலேயே 15 விக்கெட் விழுந்த அப்போட்டியில் 2வது நாளில் 19 விக்கெட்டுகள் விழுந்தது. அந்தளவுக்கு பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமின்றி அமைந்த அப்போட்டி இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் வேண்டுமென்றே எளிதாக வெற்றி பெறுவதற்காக சுமாரான பிட்ச் தயாரிக்கப்பட்டது என்றும் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விட்டது என்றும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் விமர்சித்திருப்பார்கள் என்று வீரேந்திர சேவாக் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்களும் ரசிகர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

இருப்பினும் தங்களது வாழ்நாளில் காபா மைதானத்தை இப்படி பச்சையாக பார்த்ததில்லை என்று விமர்சித்த ரிக்கி பாண்டிங், மேத்தியூ ஹெய்டன், ப்ராட் ஹாக் போன்ற முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் இதற்கு ஐசிசி தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று நியாயமாக பேசினார்கள். இந்நிலையில் காபா பிட்ச் பவுலர்களுக்கு தான் அதிக சாதகமாகவும் பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாத அளவுக்கு “சராசரிக்கும் குறைவாக” இருந்ததாகவும் அப்போட்டியில் நடுவராக செயல்பட்ட ரிச்சி ரிச்சர்ட்சன் போட்டியின் முடிவில் ஐசிசிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

- Advertisement -

அதை ஏற்றுக்கொண்ட ஐசிசி வழக்கம் போல ஒரு கருப்பு புள்ளியை பிரிஸ்பேன் காபா மைதானத்திற்கு தண்டனையாக வழங்கியுள்ளது. இது அடுத்த 5 வருடங்களுக்கு நிலுவையில் இருக்கும். அடுத்த 5 வருடங்களில் இந்த புள்ளிகள் ஐந்தை தொட்டால் இறுதியாக அந்த மைதானத்தில் ஒரு வருடம் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி தாமாகவே தடை விதிக்கும். இதனால் பின்னடைவை சந்தித்துள்ள ஆஸ்திரேலிய வாரியம் அடுத்த முறை அங்கு தரமான பிட்ச்சை உருவாக்க வேண்டிய நிர்பந்தத்திற்கும் உள்ளாகியுள்ளது.

முன்னதாக சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளை கொண்ட இந்திய துணை கண்டத்தில் தான் 2 – 3 நாட்களில் முடிவடைந்த போட்டிகளுக்கு ஐசிசி இது போன்ற தண்டனைகளை அதிகமாக வழங்கியது. அதனால் இதெல்லாம் ஐசிசிக்கு தெரியாதா? என்று ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். ஆனால் யாராக இருந்தாலும் விதிமுறை ஒன்றுதான் என்ற வகையில் தற்போது ஆஸ்திரேலியாவிடமும் ஐசிசி அதிரடி காட்டியுள்ளது. மேலும் இந்த வருடம் பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் தான் சுமாரான பிட்ச் உருவாக்கியதற்காக ஐசிசியின் தண்டனையை பெற்றுள்ளது.

- Advertisement -

முதலில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா – இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் 2வது போட்டி நடைபெற்ற பெங்களூரு சின்னசாமி மைதானம் அதிகப்படியான சுழலுக்கு சாதகமாக இருந்ததால் ஐசிசி தண்டனை வழங்கியது. அதன் பின் கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்ற ராவில்பிண்டி பிட்ச் தார் ரோடு போல இருந்ததால் முதல் முறையாக ஐசிசி கருப்பு புள்ளியை வழங்கியது.

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஸ்டைல், உலகையே மிரட்டும் இங்கிலாந்து – இந்தியாவின் உலக சாதனையை உடைத்து புதிய சாதனை

மேலும் சமீபத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியிலும் அதே போல் இருந்ததால் மீண்டும் அம்மைதானம் ஒரே வருடத்தில் 2வது கருப்பு புள்ளியை பெற்றது. அந்த 2 மைதானங்களைத் தொடர்ந்து தற்போது 3வதாக ஆஸ்திரேலியாவின் காபா மைதானம் அதே தண்டனையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement