தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. குறிப்பாக முதல் போட்டியில் இன்னிங்ஸில் தோல்வியை சந்தித்த இந்தியா 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து சாதனை படைத்து வெற்றிகரமாக நாடு திரும்பியது.
இருப்பினும் அத்தொடரில் கேப் டவுன் ஜனவரி 3ஆம் தேதி துவங்கிய 2வது போட்டி ஜனவரி 4ஆம் தேதிக்குள் முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக முதல் நாளிலேயே 23 விக்கெட்டுகள் விழும் அளவுக்கு பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அதில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது.
ஐசிசி ரேட்டிங்:
அதே போல 153/4 என்ற நல்ல நிலைமையில் இருந்த இந்தியாவும் அடுத்த 11 பந்துகளில் எஞ்சிய 6 விக்கெட்டுகளை ஒரு ரன் கூட எடுக்காமல் இழந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது. அந்த வகையில் வெறும் 107 ஓவர்களில் நிறைவு பெற்ற அப்போட்டி 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் வேகமாக நடந்து முடிந்த போட்டியாக உலக சாதனையும் படைத்தது.
அதன் காரணமாக டேல் ஸ்டைன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் கேப் டவுன் மைதானத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இந்நிலையில் தென்னாப்பிரிக்கா – இந்தியா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கேப் டவுன் மைதானம் திருத்தியற்றதாக இருந்ததாக நடுவர் கிறிஸ் பிராட் புகார் செய்துள்ளார்.
அதை ஏற்றுக் கொண்டுள்ள ஐசிசி கேப் டவுன் மைதானத்திற்கு “திருப்தியில்லை” என்ற ரேட்டிங்கை வழங்கியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் அது நடைபெற்ற மைதானத்தின் பிட்ச்க்கு நன்று, சராசரி, சராசரிக்கும் குறைவு, திருத்தியற்றது, மோசம் என்பது போன்ற ரேட்டிங்கை நடுவரின் அறிக்கையை வைத்து ஐசிசி வழங்குவது வழக்கமாகும்.
இதையும் படிங்க: கில் வேண்டாம்.. ஆப்கானிஸ்தான் தொடரில் ரோஹித்துடன் அவரை ஓப்பனிங் இறக்குங்க.. கிரண் மோர் கருத்து
அந்த வகையில் கேப் டவுன் மைதானம் சராசரிக்கும் குறைவு என்பதையெல்லாம் தாண்டி திருப்தியற்றது என்ற ரேட்டிங்கை பெற்றுள்ளது தென்னாப்பிரிக்க வாரியத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் கேப் டவுன் மைதானத்திற்கு ஒரு கருப்பு புள்ளி தண்டனையாக வழங்கப்படுவதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது. இந்த கருப்பு புள்ளியின் அளவு 6 என்பதை தொடும் போது அந்த மைதானத்தில் 12 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான தடை விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.