- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டாப் 10இல் 4 இந்தியர்கள்.. தரவரிசையிலும் கம்பேக் கொடுத்த கோலி.. பாபர் நெருங்க முடியாத உயரத்தில் கில்

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களது முதல் 2 போட்டிகளில் வங்கதேசம் மற்றும் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தானை தோற்கடித்தது. அதனால் செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா 2013க்குப்பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசைஓ பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவிலிருந்து 4 வீரர்கள் இடம் பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதத்தை அடித்து ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார்.

- Advertisement -

டாப் 5இல் 3 இந்தியர்கள்:

அதனால் ஒரு இடம் முன்னேறிய விராட் கோலி மீண்டும் டாப் 5 இடத்திற்குள் நுழைந்து 5வது இடத்தை பிடித்துள்ளார். 2017 – 2019 வரையிலான காலகட்டங்களில் 3 வருடங்கள் தொடர்ந்து விராட் கோலி நம்பர் ஒன் இடத்தில் இருந்ததை ரசிகர்களால் மறக்க முடியாது. அப்படிப்பட்ட அவர் சமீப காலங்களில் தடுமாறியதால் கீழே சென்ற நிலையில் தற்போது மீண்டும் மேலே வரத் துவங்கியுள்ளார்.

கேப்டன் ரோஹித் சர்மா 3, ஸ்ரேயாஸ் ஐயர் 9வது இடங்களில் உள்ளார்கள். அதே போல பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 46 ரன்கள் அடித்த சுப்மன் கில் 817 புள்ளிகளுடன் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். அதே போட்டியில் அசத்தத் தவறிய பாபர் அசாம் 2வது இடத்தில் 770 புள்ளிகளுடன் இருக்கிறார். எனவே அவர் எளிதில் தொட முடியாத அளவுக்கு கில் முதலிடத்தை தன் வசமாக்கியுள்ளார்.

- Advertisement -

இந்தியா – நியூஸிலாந்து:

டாப் 10 பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானுக்கு எதிராக குல்தீப் யாதவ் 3வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். சிராஜ், ஜடேஜா, ஷமி ஆகியோர் 12, 13, 14வது இடங்களில் இருக்கிறார்கள். டாப் 10 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: நெட் ப்ராக்டீஸ்ல அவர் பந்தை மட்டும் எதிர்த்து ஆடவே மாட்டேன்.. இந்திய பவுலரின் மீதான பயம் குறித்து – கே.எல் ராகுல் வெளிப்படை

ஹர்திக் பாண்டியா 4 இடங்கள் முன்னேறி 24வது இடத்தைப் பிடித்துள்ளார். அணிகள் தரவரிசையில் தொடர்ந்து இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களது அடுத்தப் போட்டியில் வலுவான நியூசிலாந்தை சந்திக்கிறது. அந்தப் போட்டி வரும் மார்ச் இரண்டாம் தேதி துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -