- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தரமில்லாத சுமாரான இந்திய அம்பயருக்கு பதவி உயர்வு வழங்கிய ஐசிசி – இந்திய ரசிகர்களே அதிருப்தி

கிரிக்கெட்டில் வெற்றிக்காக பரபரப்பான தருணங்களில் சரியான தீர்ப்புகளை வழங்குவது அம்பயர்களின் இன்றியமையாத கடமையாகும். அதிலும் எல்பிடபிள்யூ போன்ற தருணங்களில் வெறும் ஒருசில மணித்துளிகளில் சரியான தீர்ப்பை வழங்குவது நடுவர்களுக்கு மிகப்பெரிய சவாலான காரியமாகும். அதுபோன்ற தருணங்களில் அவர்கள் சரியான தீர்ப்பை வழங்கினால் போட்டி இன்னும் பரபரப்பாக மாறி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ஆனால் அதே தருணத்தில் சுமாராக செயல்பட்டு தவறான தீர்ப்பை வழங்கினால் வெற்றிக்கு தகுதியுடைய அணிக்கு இறுதியில் தோல்வி பரிசாக கிடைத்து விடும்.

அப்படிப்பட்ட பொறுப்பான வேலைக்கு முதலில் கிரிக்கெட்டின் அடிப்படை விதி முறைகளை முழுதாகப் படித்து தேர்ச்சி பெற்றபின் உள்ளூர் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட சில வருடங்கள் நடுவராக பணியாற்றினால் தான் சர்வதேச போட்டிக்கு நடுவராக செயல்பட முடியும். அதுபோல சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அம்பயர்களை “எலைட் பேனல்” என்ற பிரிவின் கீழ் தேர்வு செய்யும் ஐசிசி அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி அதிக சம்பளத்தையும் கௌரவத்தையும் அளிக்கிறது.

- Advertisement -

சுமாரான அம்பயர்:
சொல்லப்போனால் அவர்கள் தான் ஐசிசி நடத்தும் உலக கோப்பை உட்பட பெரும்பாலான சர்வதேச போட்டிகளுக்கு நடுவர்களாக செயல்படுவார்கள். அந்த வகையில் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே போன்ற தரமான வீரர்களை உருவாக்கிய இந்தியாவால் சிறந்த அம்பயர்களை பெரிய அளவில் உருவாக்க முடியவில்லை என்றே கூறலாம். ஆம் ஐசிசி எலைட் பேனல் அம்பயர்கள் பட்டியலில் வரலாற்றில் இதுவரை 3 இந்தியர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். அதில் முன்னாள் இந்திய வீரர் சீனிவாசன் வெங்கட்ராகவன் 90களில் அசத்தலாக அம்பயராக செயல்பட்டதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

அவருக்கு பின் எஸ் ரவி 2015 போன்ற காலகட்டத்தில் எலைட் பேனல் அம்பயராக இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். அவர்களுக்கு பின் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த நிதின் மேனன் என்பவர் கடந்த 2020இல் ஐசிசி எலைட் பேனல் பிரிவில் இடம்பிடித்த 3-வது இந்திய அம்பயராக பெருமை பெற்றார். அதிலும் 36 வயதிலேயே அந்த இடத்தை பிடித்த அவர் மிக இளம் வயதில் எலைட் பேனல் பிரிவில் இடம் பிடித்த அம்பயராகவும் சாதனை படைத்தார். ஆனால் அவரின் தீர்ப்புகள் எப்போதுமே சுமாராகவும் சொதப்பல்களாகவும் இருந்ததை ரசிகர்கள் பலமுறை பார்த்திருக்க முடியும்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
குறிப்பாக கடந்த 2021 ஐபிஎல் தொடரில் 2 ரன்கள் எடுக்கும் போது வெள்ளை கோட்டை தொடவில்லை என்பதற்காக பஞ்சாப் அணிக்கு 1 ரன் மட்டுமே அவர் கொடுத்தார். ஆனால் டிவி ரிப்ளையில் கிறிஸ் ஜோர்டான் வெள்ளை கோட்டை தொட்டது தெளிவாக தெரிந்ததால் அவரின் சுமாரான அம்பயரிங் அம்பலமானது. இறுதியில் பஞ்சாப் அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறி போவதற்கு அது முக்கிய காரணமாக அமைந்தது.

அதுகூட பரவாயில்லை என்பது போல் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோதிய போட்டியில் கடைசி ஓவரில் ரோவ்மன் போவெல் இடுப்புக்கு மேலே பந்து வந்த போதும் இதே நிதின் மேனன் நோ பால் வழங்கவில்லை. அதனால் கடுப்பான கேப்டன் ரிஷப் பண்ட் தனது வீரர்களை பெவிலியனுக்கு அழைத்ததை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. மொத்தத்தில் சுமாராக செயல்பட்டு வரும் அவருக்கு தற்போதைய 11 பேர் கொண்ட ஐசிசி எலைட் பேனல் பிரிவில் எப்படி இடம் கிடைத்தது என்று பல இந்திய ரசிகர்களே அதிருப்தியில் உள்ளனர்.

- Advertisement -

பதவி உயர்வு:
முன்னதாக கடந்த 2020 எலைட் பேனல் பிரிவில் இடம் பிடித்தாலும் கரோனா காரணமாக அந்தந்த நாட்டு அம்பயர்கள் அந்தந்த நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளுக்கு நடுவர்களாக செயல்படுவார்கள் என்று அறிவித்ததால் இதுவரை அவர் இந்திய மண்ணில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே நடுவராக செயல்பட்டு வருகிறார். தற்போது அந்த நிலைமை சீராகியுள்ளதால் அனைத்து அம்பயர்களும் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து நடுவர்களாக செயல்படலாம் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் நித்தின் மேனனுக்கு எலைட் பேனலில் மேலும் ஒரு வருடம் பதவியை நீட்டிப்பு செய்துள்ளது ஐசிசி பொதுவான இடத்திலும் நடுவராக செயல்படும் பதவி உயர்வை தற்போது அளித்துள்ளது. இதுபற்றி ஐசிசி நிர்வாகி ஒருவர் பேசியது பின்வருமாறு. “நிதின் மேனேனுக்கு 3 வருட பணியை 4 வருடமாக ஐசிசி சமீபத்தில் நீட்டித்துள்ளது. எனவே இம்மாத இறுதியில் பொதுவான இடத்தில் அவர் நடுவராக செயல்படுவதை பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : புதுசா இருக்கே ! களத்தில் சதமடித்த கையோடு குடும்பத்துக்கு கடிதம் எழுதிய இந்திய வீரர் – ரஞ்சி கோப்பையில் ருசிகரம்

அந்த வகையில் தற்போது இந்தியா – தென்ஆப்பிரிக்கா டி20 தொடரில் நடுவராக செயல்பட்டு வரும் அவர் ஜூன் 29இல் இலங்கையில் துவங்கும் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் முறையாக பொதுவான இடத்தில் நடுவராக செயல்பட உள்ளார்.

- Advertisement -
Published by