
பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி நிறைவு பெற்றது. ராவில்பிண்டி நகரில் நடைபெற்ற அப்போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு போட்டியில் வென்று வங்கதேசம் புதிய சாதனை படைத்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற முதல் அணியாகவும் வங்கதேசம் வரலாறு படைத்தது. மறுபுறம் வங்கதேசத்துக்கு எதிராக டிக்ளேர் செய்த பின்பும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது.
அதனால் பாகிஸ்தான் அணி தற்சமயத்தில் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 30.56% புள்ளிகளை பெற்ற பாகிஸ்தான் 8வது இடத்திற்கு சரிந்தது. மறுபுறம் வரலாற்று வெற்றியைப் பெற்ற வங்கதேசம் 40 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில் ராவில்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 2 அணிகளுமே நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என ஐசிசி அறிவித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் 6 ஓவர்களையும் வங்கதேசம் 3 ஓவர்களையும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் வீசி முடிக்கவில்லை என ஐசிசி கண்டறிந்துள்ளது. எனவே அதற்கு தண்டனையாக பாகிஸ்தானுக்கு அப்போட்டியின் சம்பளத்திலிருந்து 30% அபராதமும் 6 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளும் (ஏற்கனவே பெற்றதில்) கழிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அதே போல வங்கதேச அணிக்கு 15% சம்பளம் அபராதமும் 3 சாம்பியன்ஷிப் புள்ளிகளும் கழிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. அதை 2 அணிகளின் கேப்டனாகும் ஏற்றுக்கொண்டதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது. ஐசிசி வெளியிட்ட இந்த அறிவிப்புக்குப் பின் 2025 சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் 6 புள்ளிகளை இழந்து 16 புள்ளிகளுடன் 22.22% புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மைதானத்தில் வைத்தே கேப்டனை இப்படி அவமானப்படுத்துவது தவறு – ஷாஹீன் அப்ரிடி செயலுக்கு பிரபலங்கள் கண்டனம்
அதனால் அடுத்து வரும் அனைத்து போட்டிகளில் வென்றாலும் 2025 ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு பாகிஸ்தான் 90% தகுதி பெறுவதற்கு வாய்ப்பில்லை. அதன் காரணமாக ஏற்கனவே 2021, 2023 ஃபைனல்களுக்கு தகுதி பெறாத பாகிஸ்தானின் 2025 சாம்பியன்ஷிப் ஃபைனல் கனவும் கிட்டத்தட்ட சுக்கு நூறாக நொறுங்கியுள்ளது என்றே சொல்லலாம். மறுபுறம் வங்கதேசம் 38.89% புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.