இந்தியா கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து தங்களது சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் தோற்கடித்த இந்தியா பதிலடி கொடுத்து அசத்தியது. ஆனால் 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
மறுபுறம் 193 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் லோயர் ஆர்டரில் டெய்ல் எண்டர்களுடன் சேர்ந்து ரவீந்திர ஜடேஜா 61* ரன்கள் அடித்து பாறையைப் போல் போராடியும் இந்தியாவால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அதன் காரணமாக இந்திய இவர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார்கள்.
2 பாய்ண்ட்ஸ் அபராதம் கட்டுங்க:
முன்னதாக இந்தத் தொடர் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது போட்டியில் வெற்றி பெற்றதற்காக இங்கிலாந்து 12 புள்ளிகளைப் பெற்றது. அதனால் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளிப்பட்டியலில் இலங்கையை முந்திய இங்கிலாந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 3வது போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காத விதிமுறையை மீறியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. எனவே இங்கிலாந்து அணிக்கு அந்தப் போட்டியின் சம்பளத்திலிருந்து 10% அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் கழிக்கப்படுவதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.
வென்றும் பின்னடைவு:
அந்த தண்டனை இங்கிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2 புள்ளிகளை கழித்த பின் இங்கிலாந்து 22 புள்ளிகளை 61.11% விகிதத்தில் பெற்றுள்ளது. அதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருந்த அந்த அணி 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. மறுபுறம் 3வது இடத்தில் இருந்த இலங்கை 66.67% புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு பிறகு எமோஷனலான மெசேஜை பகிர்ந்த முகமது சிராஜ் – ஆறுதல் கூறும் ரசிகர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 100% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 1 வெற்றி 2 தோல்விகளைச் சந்தித்த இந்தியா 33.33% புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. எனவே இந்தப் புள்ளிப்பட்டியலில் மேலே செல்லவும், தொடரை சமன் செய்யவும் இந்தியா 4வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



