சர்வதேச கிரிக்கெட்டை கட்டுப்படுத்தி வரும் ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா வரும் டிசம்பர் மாதம் பொறுப்பேற்க உள்ளார். பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் அவர் அந்த பதவிகளில் சிறப்பாக செயல்பட்டார். அதன் காரணமாக அடுத்த ஐசிசி தலைவராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் காலத்திற்கு தகுந்தார் போல் ஐசிசி கமிட்டி புதிய மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. சௌரவ் கங்குலி தலைமையிலான அந்த கமிட்டியில் மஹிலா ஜெயவர்த்தனே, சான் பொல்லாக், டேனியல் வெட்டோரி, ரோஜர் ஹார்பர், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். புதிய தலைவராக பொறுப்பேற்கும் ஜெய் ஷா விரைவில் அந்த கமிட்டியில் இணைய உள்ளார்.
புதிய பரிந்துரைகள்:
அந்த கமிட்டி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் புதிதாக கொண்டு வரப்பட வேண்டிய சில மாற்றங்களை ஐசிசிக்கு பரிந்துரைத்துள்ளது. அதில் முதலாவதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை போன்ற அணிகள் பெரும்பாலும் 2 போட்டிகள் கொண்ட தொடரில் மட்டுமே விளையாடுகின்றன. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மட்டுமே 3, 4, 5 போட்டிகள் கொண்ட பெரிய தொடர்களில் விளையாடுகின்றன.
அப்படி விளையாடும் போது சிறிய தொடரில் வெல்லும் அணிகள் சமமின்றி அதிக புள்ளிகளை பெறுகின்றன. அதை தவிர்ப்பதற்காக 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் ஒவ்வொரு அணியும் குறைந்தது மூன்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஐசிசி கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் 2 புதிய பந்துகள் பயன்படுத்துவதாக கௌதம் கம்பீர் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
ஜெய் ஷா தலைவரான பின்:
அதில் விரல் ஸ்பின்னர்கள் அடி வாங்குவதுடன் பந்து பழையதானதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்விங் கிடைப்பதில்லை என்று கௌதம் கம்பீர் கூறியிருந்தார். அதனால் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கம்பீர் விமர்சித்திருந்தார். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 25 ஓவர்கள் மட்டும் 2 பந்துகள் பயன்படுத்தலாம். கடைசி 25 ஓவர்களில் ஒரு பந்து மட்டுமே பயன்படுத்த ஐசிசி கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிங்க: என்னை சிரிக்க வைக்கும் அவர் தான் இந்தியாவின் துருப்புச்சீட்டு.. அந்த 2 பேரையும் சமாளிப்போம்.. கமின்ஸ்
அதே போல இந்தியா போன்ற அணிகள் தங்கள் நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக இளஞ்சிவப்பு நிற பந்து டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடுவதில்லை. ஆனால் இனிமேல் அனைத்து அணிகளும் அதிகமான இளஞ்சிவப்பு நிற பந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகள் ஜெய் ஷா தலைவராக பொறுப்பேற்ற பின் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



