உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : பைனல் நடைபெறும் தேதிகளை வெளியிட்ட ஐசிசி – முழுவிவரம் இதோ

WTC
- Advertisement -

நூற்றாண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகளை 60 ஓவர்களாக துவக்கப்பட்டு பின்னர் 50 ஓவர்களாக மாற்றப்பட்ட ஒருநாள் போட்டிகள் பின்னுக்கு தள்ளி ரசிகர்களின் அபிமான கிரிக்கெட்டாக உருவெடுத்தது. ஆனாலும் 90களின் இறுதி வரை டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு தனித்துவமாகவே இருந்து வந்தது. இருப்பினும் 3 – 4 மணி நேரத்தில் முடிவை காணும் வகையில் உருவாக்கப்பட்ட டி20 போட்டிகள் எதிர்பாராத த்ரில்லர் திருப்பங்களை விருந்து படைப்பதால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை பின்னுக்குத் தள்ளி இன்று ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ள நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக முன்னேறியுள்ளது.

அதனால் அதிகப்படியான பணம் கிடைத்தாலும் கிரிக்கெட்டின் உயிர்நாடியாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளின் மவுசு அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டது. போதாக்குறைக்கு 5 நாட்கள் நடைபெற்றாலும் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தது ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகளின் மீது ஆர்வத்தை இழப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் இதை இப்படியே விட்டால் வேலைக்காகாது என்று கருதிய ஐசிசி டி20, 50 ஓவர் உலகக் கோப்பைகளைப் போலவே கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேக உலகக் கோப்பையை தனியாக அறிமுகப்படுத்தியது.

- Advertisement -

பைனல் தேதிகள்:
குறிப்பாக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை கிடையாது மாறாக அனைத்து தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியில் முதலிரண்டு இடங்களை பிடித்து ஃபைனலில் எதிரணியை தோற்கடித்தால் மட்டுமே கோப்பை வழங்குவோம் என்ற ஆரோக்கியமான போட்டியை ஐசிசி ஏற்படுத்தியது. அதனால் சமீப காலங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நிறைய அணிகள் விளையாடுவதால் தற்போது டெஸ்ட் போட்டிகள் மீண்டும் உயிர்பித்து ரசிகர்களிடையே பழைய மவுசை பெற்று வருகிறது.

அந்த வகையில் 2019ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கோப்பையின் முதல் தொடரில் லீக் சுற்றில் சக்கை போடு போட்ட விராட் கோலி தலைமையிலான இந்தியா 2021 ஜூலையில் சௌதம்டன் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் நியூசிலாந்திடம் வழக்கம் போல சொதப்பலாக செயல்பட்டு ஏமாற்றத்தை சந்தித்தது. அதை தொடர்ந்து 2021இல் மீண்டும் துவங்கியுள்ள 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் விராட் கோலி கேப்டன் பகுதியிலிருந்து விலகிய பின் சில தோல்விகளை சந்தித்த இந்தியா உலகின் நம்பர் ஒன் இடத்தையும் இழந்து ஆரம்பத்தில் தடுமாறியது.

- Advertisement -

இருப்பினும் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்ற இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் வென்றுள்ளது. அதனால் தற்சமயத்தில் 61.67% புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா பைனல் தகுதி பெறுவதற்கு 99% பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 70.83% புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா ஏற்கனவே கிட்டத்தட்ட பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்டது.

முன்னதாக வரும் ஜூலை மாதம் லண்டனில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த ஐசிசி அதற்கான தேதிகளை வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் மாபெரும் இறுதி போட்டி லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் பைனலில் மழையின் தாக்கத்தை தவிர்ப்பதற்காக ஜூன் 12ஆம் தேதி ரிசர்வ டே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா எடுத்த அந்த முடிவு தான் இன்னைக்கு அவரோட கரியரையே காப்பாத்தியிருக்கு – இயான் சேப்பல் கருத்து

முன்னதாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த இப்போட்டி சில காரணங்களால் ஓவல் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது அதற்கான தேதிகளை வெளியிட்டுள்ள ஐசிசி அதை அதை உறுதிப்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஜூன் 7ஆம் தேதி நடைபெறும் மாபெரும் பைனலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுவதற்கு தான் 99% வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement