2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை இந்தியாவுக்கு ராசியான இடத்துக்கு மாற்றிய ஐசிசி.. ரோஹித் படை சாதிக்குமா?

Wtc final
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிப்பதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கடந்த 2019ஆம் ஆண்டு ஐசிசி அறிமுகப்படுத்தியது. அந்த புதிய தொடரில் விராட் கோலி தலைமையில் லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய இந்தியா 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்றது. ஆனால் இங்கிலாந்தின் சௌதம்டன் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் மழைக்கு மத்தியில் சொதப்பிய இந்தியா பரிதாபமாக தோற்றது.

அதைத்தொடர்ந்து 2021 – 23 சுற்றில் மீண்டும் சிறப்பாக விளையாடி இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்றது. ஆனால் இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் ரோஹித் சர்மா தலைமையில் சுமாராக விளையாடிய இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்த சூழ்நிலையில் தற்போது 2023 – 25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

ஐசிசி அறிவிப்பு:

அதில் தற்சமயத்தில் 68.52% புள்ளிகளுடன் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 3 தொடர்களில் விளையாட உள்ளது. அதில் சொந்த மண்ணில் நடைபெறும் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் கண்டிப்பாக இந்தியா வெல்லும் என்று நம்பப்படுகிறது.

அதே போல ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரிலும் இந்தியா வெல்வதற்கு வாய்ப்புள்ளது. இல்லையென்றாலும் மோசமாக தோற்காவிட்டால் கூட புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடத்தைப் பிடித்து மீண்டும் இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கு 90% பிரகாச வாய்ப்புள்ளது. இந்நிலையில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்தியாவுக்கு ராசியான லார்ட்ஸ்:

அதன் படி வரும் ஜூன் 11 – 15 ஆகிய தேதிகளில் கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஃபைனல் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இதற்கு முன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்கள் சௌதம்டன், ஓவல் மைதானத்தில் தான் நடைபெற்றது. அதை தற்போது முதல் முறையாக லார்ட்ஸ் மைதானத்துக்கு ஐசிசி மாற்றியுள்ளது இந்தியாவுக்கு ராசியானதாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 2022 ஹீரோ அசத்திட்டாரு.. அடுத்ததா இந்தியாவை வீழ்த்துவோம்.. பாகிஸ்தானை சாய்த்த வங்கதேச கேப்டன் பேட்டி

ஏனெனில் அங்கு தான் கபில் தேவ் தலைமையில் முதல் முறையாக இந்தியா 1983 உலகக் கோப்பையை வென்று கிரிக்கெட்டுக்கு ஆழமான விதை போட்டது. மேலும் 2014, 2022இல் தோனி மற்றும் விராட் கோலி தலைமையில் இந்தியா அங்கே இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்தது. எனவே தங்களுக்கு ராசியான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement