சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சார்பில் 2025 ஆம் ஆண்டு ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் ஹைபிரிட் முறையில் நடத்தப்பட்டு நிறைவடைந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இறுதிவரை சென்று நியூசிலாந்து அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
ஐ.சி.சி வெளியிட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பெஸ்ட் பிளேயிங் லெவன் :
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. பின்னர் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதி போட்டிக்கு நுழைந்தது. அதேபோன்று இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
பின்னர் மார்ச் 9-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி இருந்த வேளையில் அந்த வீரர்களையெல்லாம் ஒன்றிணைத்து இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து சிறந்த பிளேயிங் லெவனை ஐசிசி தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதில் இந்திய அணியின் சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவுக்கு இடம் வழங்காத ஐசிசி மிட்செல் சான்ட்னரை கேப்டனாக நியமித்துள்ளது.
இந்த அணியில் துவக்க வீரர்களாக தொடர் நாயகன் ரச்சின் ரவீந்திரா மற்றும் இப்ராஹிம் ஜாத்ரான் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளது. அதேபோன்று மூன்றாவது இடத்தில் விராத் கோலியும், நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் இடம்பிடித்துள்ளனர். ஐந்தாவது இடத்தில் கே.எல் ராகுலும், ஆறாவது இடத்தில் கிலென் பிலிப்ஸ்-ம், ஏழாவது இடத்தில் அஸ்மத்துல்லா ஓமர்சாயும் இடம் பிடித்துள்ளனர்.
அதேபோன்று எட்டாவது இடத்தில் மிட்சல் சான்ட்னரும் ஒன்பதாவது இடத்தில் வருண் சக்கரவர்த்தியும், வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் 12 ஆவது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி ஐசிசி வெளியிட்டிருந்த 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : பும்ரா இல்லாமலும் நாங்க சாம்பியன்ஸ் டிராபியை ஜெயிக்க இதுதான் காரணம் – ரோஹித் சர்மா பேட்டி
1) ரச்சின் ரவீந்திரா, 2) இப்ராஹிம் ஜாத்ரான், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) கிளென் பிலிப்ஸ், 7) அஸ்மத்துல்லா ஒமர்சாய், 8) மிட்சல் சான்ட்னர், 9) வருண் சக்ரவர்த்தி, 10) மேட் ஹென்றி, 11) முகமது ஷமி.



