இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தங்களது சொந்த மண்ணில் விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் மாதம் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த தொடர்களை இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது.
அது போன்ற சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக டிராவிஸ் ஹெட் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை அடித்து நொறுக்கிய அவர் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல உதவினார். அதை விட 2023 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் நொறுக்கிய அவர் ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வெல்ல உதவினார்.
இந்தியா முடிச்சு விட்ருவாங்க:
இந்நிலையில் டிராவிஸ் ஹெட் போன்ற அதிரடியாக விளையாடக்கூடிய வீரரின் ஆட்டம் அனைத்து நேரங்களிலும் இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக செல்லுபடியாகாது என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சேப்பல் எச்சரித்துள்ளார். குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ரா, அஸ்வின் ஆகியோரிடம் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டாக அதிக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே ஓப்பனிங்கில் வேறு வீரரை களமிறக்குவதே சிறந்த வழி என்று தெரிவிக்கும் இயன் சேப்பல் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒருவேளை கொஞ்சம் குறைந்த பலமுடைய அணிக்கு எதிராக என்றால் அது சரியாக இருக்கலாம். ஆனால் இந்தியா போன்ற பவுலிங் அட்டாக் கொண்ட அணிக்கு எதிராக அது மங்கலான முடிவாக இருக்கும்”
பும்ரா, அஸ்வின் சவால்:
“ஜஸ்ப்ரித் பும்ராவை செட்டிலாக விடாமல் தடுக்க ஹெட்டை துவக்க வீரராக களமிறக்குவது ஒரு பேட்ஸ்மேனிடம் கேட்கப்படும் அதிகபட்ச வேலையாகும். ஏனெனில் பும்ரா, சிராஜ் ஆகியோர் அட்டாக் செய்யும் மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வாய்ப்பில்லை. சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மட்டுமின்றி டிராவிஸ் ஹெட் நல்ல ஆஃப் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராகவும் பாதிக்கப்படக் கூடியவர்”
இதையும் படிங்க: ஐசிசி மகளிர் டி20 உ.கோ: 106 ரன்ஸ்.. பாகிஸ்தானை அடக்கிய இந்தியா.. கடமையை மட்டுமே செய்ததால் ரசிகர்கள் கோபம்
“தந்திரமான ரவிச்சந்திரன் அஸ்வின் எதிரணியின் ஆக்ரோஷமான அணுகு முறையில் பீதியடைய வாய்ப்பில்லை. அஸ்வினை எதிர்கொள்வதில் மிகவும் உறுதியானவராக இருப்பார் என்பதாலேயே அவரை துவக்க வீரராக விளையாட வைக்கலாம் என்ற வாதங்களை அதிகரிக்கிறது” என்று கூறினார். இருப்பினும் டேவிட் வார்னர் ஓய்வு பெற்ற நிலையில் உஸ்மான் கவாஜா – ஹெட் ஓப்பனிங் ஜோடியாக களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது.



