ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற 20வது போட்டியில் மும்பையை அதனுடைய சொந்த மண்ணில் பெங்களூரு 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் 64, விராட் கோலி 67 ரன்கள் எடுத்த உதவியுடன் 222 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் அதைத் துரத்திய மும்பை 20 ஓவரில் கடுமையாகப் போராடியும் 209-9 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
அந்த அணிக்கு துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 17, ரிக்கல்டன் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். மிடில் ஆர்டரில் வில் ஜேக்ஸ் 22, சூரியகுமார் யாதவ் 28 ரன்கள் மட்டுமே எடுத்து பின்னடைவைக் கொடுத்தனர். அதே போல மிடில் ஆர்டரில் அதிரடியாக போராடிய திலக் வர்மா 56 (29), ஹர்டிக் பாண்டியா 42 (15) ரன்கள் மட்டுமே எடுத்தப் போதிலும் ஃபினிஷிங் செய்யத் தவறினார்கள்.
தடுமாறும் ரோஹித்:
அதனால் மும்பை தங்களுடைய 4வது தோல்வியை பதிவு செய்தது. மறுபுறம் மும்பையை அதனுடைய சொந்த மண்ணில் 10 வருடங்கள் கழித்து தோற்கடித்து 3வது வெற்றியைப் பதிவு செய்த பெங்களூருவுக்கு அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 4 விக்கெட்டுகளை எடுத்தார். மும்பையின் இந்தத் தோல்விக்கு ரோகித் சர்மா முக்கிய காரணமாக அமைந்தார் என்றே சொல்லலாம்.
ஏனெனில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்த வான்கடே பிட்ச்சில் அவர் கொஞ்சம் நிலைத்து நின்று விளையாடியிருந்தால் எளிதாக பெரிய ரன்கள் குவித்து மும்பைக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் சொந்த சாதனைப் பற்றி கவலைப்படாமல் சுயநலமின்றி அடித்து நொறுக்குகிறேன் என்ற அணுகு முறையில் விளையாடும் ரோஹித் 17 (9) ரன்னில் 2வது ஓவரிலேயே அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்.
இப்படியே ஓட்டாதிங்க:
இந்நிலையில் எவ்வளவு நாட்கள் இப்படி சுயநலமின்றி விளையாடுகிறேன் என்ற பெயரில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கத் தவறுவீர்கள் என்று ரோஹித் மீது முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிஷப் அதிருப்தியை தெரிவித்துள்ளார். இது பற்றி நேரலையில் அவர் விமர்சித்தது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவிடமிருந்து மும்பைக்கு நிறைய ரன்கள் தேவைப்படுகிறது. வெறும் 12 – 15 ரன்கள் துவக்கம் அல்ல” எனக் கூறினார்.
இதையும் படிங்க: எம்ஐ, சிஎஸ்கே, கேகேஆரை சாய்த்த ஆர்சிபி பெயரில் 2025 கோப்பையை எழுதுங்க.. படிதார் தனித்துவ சாதனை
அவருடன் பேசிய ரவி சாஸ்திரி. “பொதுவாக உங்களுக்கு தொடர்ச்சியாக அசத்தக்கூடிய நிலைத்தன்மை வேண்டும். நீண்ட தூரம் வெற்றிகரமாக பயணிக்கும் அணிகளுக்கு டாப் ஆர்டர் நெருப்பாக விளையாடுவது வழக்கமாகும். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா 400 ரன்கள் அடிப்பதே மும்பைக்கு தேவையான விஷயம். 15 – 20 ரன்கள் 40 – 60களாக மாற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.



