இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது தற்போது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
பும்ரா விளையாடலனா இங்கிலாந்து வீரர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் : இயான் பெல்
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 2-ஆம் தேதியான இன்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே பலரது முக்கிய கேள்வியாகவும் இருந்து வருகிறது.
ஏனெனில் ஏற்கனவே இந்திய அணி சார்பாக பும்ரா மட்டுமே மிகச் சிறப்பாக பந்துவீசி வரும் வேளையில் பும்ரா இந்த இரண்டாவது போட்டியில் ஆடவில்லை என்றால் நிச்சயம் இந்திய அணிக்கும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். இதனால் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
ஏற்கனவே இந்த போட்டிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : பும்ரா இரண்டாவது போட்டியில் விளையாடும் அளவிற்கு தயாராகத்தான் இருக்கிறார். ஆனால் மைதானத்தின் தன்மை மற்றும் அவரது பணிச்சுமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு இறுதி நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதனால் நிச்சயம் இரண்டாவது போட்டியில் அவர் ஓய்வெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான இயான் பெல் : பும்ரா இந்த போட்டியில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் ஓய்வின்றி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ராவை பாதுகாக்க வேண்டும் என்பது அவசியம் தான். ஆனால் அவர் உடற்தகுதியுடன் பிட்டாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் விளையாட வேண்டும்.
அவர் விளையாடவில்லை எனில் இந்திய அணிக்கு அது ஒரு மிகப்பெரிய பின்னடைவு. தற்போதைய உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றால் அது பும்ரா தான் எனவே அவர் விளையாடவில்லை என்றால் இங்கிலாந்து அணியின் வீரர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். அதே போன்று குல்தீப் யாதவும் பிளேயிங் லெவனில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : 5 சதங்களை டாடியா மாத்துங்க.. இதை செய்யாம விக்கெட்ஸ் விழாது.. இந்திய வீரர்களுக்கு அஸ்வின் அட்வைஸ்
ஏனெனில் அவரது பந்துவீச்சு இங்கிலாந்து வீரர்களுக்கு நிச்சயம் அபாயகரமான ஒன்றாக இருக்கும். அதோடு வாஷிங்டன் சுந்தர் விளையாடினாலும் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என கூடுதல் சாதகம் கிடைக்கும் என்று இயான் பெல் பேசியது குறிப்பிடத்தக்கது.



