
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு 8 அணிகளுடன் சாதாரண டி20 கிரிக்கெட் தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர் ஒன் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்கள் எதிர்பாராத திரில்லர் திருப்பங்களை விருந்தாக படைப்பதால் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளை விட ஐபிஎல் மிகச் சிறந்த தொடராக திகழ்வதாக ஏபி டீ வில்லியர்ஸ், சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் பாராட்டியுள்ளனர். அதே போல ஒவ்வொரு வருடமும் இந்த தொடரால் பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கும் பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட்டை நடத்தும் ஐசிசியை விட பணக்கார வாரியமாக ஜொலித்து வருகிறது.
சொல்லப்போனால் 2025 முதல் 84, 94 போட்டிகளாக பிசிசிஐ விரிவுபடுத்த இருக்கும் ஐபிஎல் சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாகவும் உருவெடுத்துள்ளது. அப்படி பணத்திலும் தரத்திலும் பன்மடங்கு உயர்ந்து நிற்கும் ஐபிஎல் தொடரை பார்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் தனித்தனியே டி20 தொடர்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுடன் போட்டி போடுவதற்காக பிஎஸ்எல் தொடரை நடத்தி வந்தாலும் ஐபிஎல் உச்சத்தை கொஞ்சம் கூட தொட முடியவில்லை.
ஐபிஎல் சுமார் தான்:
ஆனாலும் தரத்தில் ஐபிஎல் தொடரை விட தங்களது பிஎஸ்எல் தொடர் தான் உலகத்தரம் வாய்ந்தது என்றும் நம்பர் ஒன் தொடர் என்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பல முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் மார்த்தட்டி வருகிறார்கள். இந்நிலையில் பிஎஸ்எல் தொடரை தவிர்த்து வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் நீங்கள் விரும்பும் தொடர் எது என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் தொடர் தரமானது என்பதால் அதை பார்க்க விரும்புவதாக தெரிவித்த பாபர் அசாம் கிட்டத்தட்ட பாகிஸ்தான் சூழ்நிலைகளை கொண்ட இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை யார் பார்ப்பார் என்ற வகையில் பேசியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் நிலவும் கால சூழ்நிலைகள் மிகவும் வித்தியாசமானது. அங்குள்ள பிட்ச்கள் மிகவும் வேகமாக இருக்கும் என்பதால் அங்கே நீங்கள் நிறையவற்றை கற்றுக் கொள்ளலாம். மறுபுறம் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் ஆசிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் நிலவும் அதே கால சூழ்நிலை தான் இருக்கும்” என்று கூறினார். இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் அவரை தாறுமாறாக கலாய்த்து வருகிறார்கள்.
குறிப்பாக சிறந்த டி20 தொடர் என்று பாபர் அசாம் கூறும் பிக்பேஷ் தொடரில் விளையாடும் பல ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் அந்தத் தொடரை விட ஐபிஎல் தொடரில் அதிக பணம் கிடைப்பதாலும் உலகின் பல்வேறு வீரர்கள் இணைந்து விளையாடுவதாலும் இந்தியாவுக்கு படையெடுப்பதாக ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். அத்துடன் பிக்பேஷ் தொடரை விட ஐபிஎல் தொடர் மிகவும் சிறந்தது என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் முதல் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வரை பலரும் சமீப காலங்களில் மனதார பாராட்டியுள்ளனர்.
மேலும் தரமான பிட்ச் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் உங்களது செயல்பாடுகள் மறந்து விட்டதா என்றும் பாபர் அசாமுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். அப்படி கலாய்த்து வரும் பல ரசிகர்களுக்கு மத்தியில் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும் நேரடியாக பாபர் அசாமை தாறுமாறாக சிரித்து கலாய்த்துள்ளார்.
இதையும் படிங்க:2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்கு விளையாடுங்க, ஷேன் வாட்சனின் கோரிக்கைக்கு பாண்டியா நேரடி பதில்
முன்னதாக கடந்த 2008 ஐபிஎல் தொடரில் சாகித் அப்ரிடி உட்பட ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்ற நிலையில் எல்லை பிரச்சினை காரணமாக அந்நாட்டு வீரர்கள் மற்றும் பங்கேற்பதற்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.