IND vs ENG : அவர்தான் கோச்சா வந்திருக்கனும், தவறுதலாக என்னை பயிற்சியாளர் வேலைக்கு போட்டாங்க – ரவி சாஸ்திரி ஓப்பன்டாக்

Shastri
- Advertisement -

கடந்த வருடம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது ஜூலை 1-ஆம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் அற்புதமாக போராடி 412 ரன்கள் சேர்த்தது. சுப்மன் கில் 17, புஜாரா 13 என தொடக்க வீரர்களும் விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 11 என முக்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 98/5 என ஆரம்பத்திலேயே திணறிய இந்தியாவை 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நங்கூரமாக பேட்டிங் செய்து 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தினர்.

அதில் 89 பந்துகளில் அதிரடியாக பேட்டிங் செய்து சதமடித்த ரிஷப் பண்ட் 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 146 (111) ரன்களை 131.53 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் நிதானமாக பேட்டிங் செய்த ஜடேஜ 13 பவுண்டரியுடன் சதமடித்து 104 ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் யாருமே எதிர்பாராத வகையில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 35 ரன்களை தெறிக்கவிட்ட கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

மிரட்டும் இந்தியா:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு பந்துவீச்சில் மிரட்டிய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்து ஆரம்பத்திலேயே சவாலை கொடுத்தார். அதனால் 2-வது நாள் 84/5 என்ற நிலையில் இங்கிலாந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. முன்னதாக கடந்த வருடம் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தலைமையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த இந்தியா 15 வருடங்களுக்குப் பின் அந்நாட்டில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க காத்திருந்தது.

ஆனால் துரதிஷ்டவசமாக பாதியில் நிறுத்தப்பட்ட அந்த போட்டி தற்போது நடைபெறும் போது இரு அணியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஏனெனில் கடந்த வருடம் தடுமாறிய இங்கிலாந்து இம்முறை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் தலைமையில் புத்துயிர் பெற்று அதிரடி வெற்றிகளை குவிக்கும் வலுவான அணியாக மாறியுள்ளது.

- Advertisement -

ஆனால் அதை சமாளிப்பதற்கு இந்திய தரப்பில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டு வெளியேறினார். அதனால் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட கேப்டன்ஷிப் அனுபவமில்லாத பும்ரா தலைமையில் வெல்லுமா என சந்தேகிக்கப்பட்ட இந்தியா முதல் 2 நாட்களில் அட்டகாசமாக விளையாடி வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.

கோச் டிராவிட்:
இந்தியாவின் இந்த அற்புதமான போராட்டத்திற்கு அதிரடி இங்கிலாந்துக்கு அவர்களது வழியிலேயே பாடம் புகட்ட இந்திய வீரர்களுக்கு உத்வேகம் கொடுத்துள்ள புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். கடைசியாக கடந்த 2007இல் கேப்டனாக அவரது தலைமையில் டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா இம்முறை பயிற்சியாளராக அவரது தலைமையில் கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் வர்ணனையாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த தம்மைவிட 2016 முதல் அண்டர்-19 அளவில் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட் இந்தியாவின் பயிற்சியாளராக இருப்பதற்கு முழுமுதற் தகுதியானவர் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். 2017 – 2021 வரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு விடைபெற்ற அவர் தற்போது மீண்டும் வர்ணனையாளராக இந்தப் போட்டியில் செயல்படும் நிலையில் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“எனக்கு பின்பு ராகுலை தவிர இந்த பொறுப்பேற்க வேறு யாரும் சிறந்தவராக இருக்க முடியாது. சொல்லப்போனால் எனக்கு தவறுதலாக அந்த வேலை கிடைத்தது. ஏனெனில் பெரும்பாலும் வர்ணனையாளராக செயல்பட்ட எனக்கு கிடைத்த வேலையில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டேன். ஆனால் ராகுல் மிகவும் கடினமான பயிற்சிகளை கொண்ட சூழ்நிலைகளை சந்தித்து வந்தவர். அவர் அண்டர்-19 அளவில் பயிற்சியாளராக இருந்து தற்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பதால் நிச்சயம் இதை மகிழ்ச்சியுடன் செய்வார் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் சிறப்பாக செயல்பட்டால் போற்றும் ஊடகங்கள் மோசமாக செயல்பட்டால் சொந்த மண்ணில் மட்டும் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்று விமர்சிப்பதை தடுப்பதற்காக விராட் கோலி மற்றும் அணியுடன் அமர்ந்து வெளிநாடுகளில் எப்படி 20 விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்று விவாதித்து அதை களத்தில் செய்து காட்டி வெற்றி கண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதையும் படிங்க : IND vs ENG : 2014இல் நிகழ்ந்த சண்டையை மறந்து நண்பர்களாக பாராட்டிக்கொள்ளும் இந்திய – இங்கிலாந்து வீரர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி

ரவி சாஸ்திரி தலைமையில் ஐசிசி உலகக் கோப்பையை தவிர எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் சக்கை போடு போட்ட இந்தியா குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் பல சரித்திர வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement