
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. அந்த முதல் பாதி தொடரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் அந்த அணி வெறும் 2 வெற்றி 6 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது.
குறிப்பாக முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்த அந்த அணி அடுத்து நடைபெற்ற 5 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்தது. அதன் பின் தோனி தலைமையில் லக்னோவுக்கு எதிராக வென்ற சென்னை தொடர்ந்து அசத்தும் என்று நம்பப்பட்டது. ஆனால் ஏப்ரல் இருபதாம் தேதி நடைபெற்ற போட்டியில் மும்பையிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை படுதோல்வியை சந்தித்தது.
மும்பையில் நடந்த அந்தப் போட்டியில் மீண்டும் தடுமாற்றமாக விளையாடிய சென்னை 20 ஓவரில் 177 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் அந்த இலக்கை மும்பை வெறும் 15.4 ஓவரில் தொட்டு எளிதாக தங்களுடைய 4வது வெற்றியைப் பெற்றது. அதனால் புள்ளிப்பட்டியலில் மும்பை 6வது இடத்திற்கு முன்னேறிய நிலையில் சென்னை தொடர்ந்து 10வது இடத்தை வலுவாக பிடித்துள்ளது.
இதற்கிடையே மற்ற 9 அணிகளைக் காட்டிலும் சிஎஸ்கே அணி தான் மிகவும் மோசமான ரன் ரேட்டை (-1.392) கொண்டுள்ளது. அதனால் அந்த அணி பிளே ஆஃப் செல்வது மிகவும் கடினமாகியுள்ளது. ஒருவேளை இங்கிருந்து சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமெனில் அடுத்த 6 போட்டிகளிலும் கட்டாயம் வெல்ல வேண்டும். அதை செய்தால் மொத்தம் 8 வெற்றி 16 புள்ளிகளுடன் வேறு அணிகளை எதிர்பார்க்காமல் சென்னை நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம்.
ஒருவேளை அடுத்த 6 போட்டிகளில் சென்னை 5 வெற்றிகளைப் பெற்றாலும் பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதற்கு சென்னை அந்த 5 வெற்றிகளையும் கொஞ்சம் பெரியளவில் பெற்று மோசமாக இருக்கும் ரன்ரேட்டை நன்றாக மாற்ற வேண்டும். ஒருவேளை 4 வெற்றிகளை பெற்றால் அத்தோடு சென்னை வீட்டுக்கு கிளம்பலாம்.
இதையும் படிங்க: 2025 கோப்பை மும்பைக்கே.. எல்லாம் முடிஞ்சு போன சிஎஸ்கே இனிமேலாச்சும் இதை செய்யனும்.. ஸ்ரீகாந்த்
மொத்தத்தில் ஒரு காலத்தில் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதற்கு பெயர் போன அணியாக ஜொலித்து வந்தது. ஆனால் இந்த வருடம் மோசமாக விளையாடும் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்கப் போராடி வருகிறது. அதனால் இதுவரை விளையாடிய விதத்தை பார்த்த பின்பும் கூட இன்னுமா சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று நம்புகிறீர்கள்? என எதிரணி ரசிகர்கள் கலாய்கின்றனர்.