ஐசிசி மகளிர் 2024 டி20 உ.கோ: துவங்கும் முன்பே நாக் அவுட்டான இந்தியா? செமி ஃபைனல் செய்ய வேண்டியது

- Advertisement -

ஐசிசி 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் நான்காம் தேதி ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி தங்களது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆனால் அந்தப் போட்டியில் சுமாராக ஃபீல்டிங் செய்து பேட்டிங்கில் மோசமாக விளையாடிய இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 1990களில் ஆடவர் அணி எப்படி இருந்ததோ அதே போல இன்னும் திண்டாடி வரும் இந்திய மகளிரணி இதுவரை ஒரு உலகக் கோப்பையை கூட வென்றதில்லை.

அத்துடன் அழுத்தமான நாக் அவுட் சுற்றுப்போட்டிகளில் இந்திய மகளிரணி சொதப்பலாக விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. இருப்பினும் இம்முறை 2023, 2024 மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாடிய இந்திய வீராங்கனைகள் நல்ல அனுபவத்தை பெற்றுள்ளனர். அதனால் இம்முறை இந்திய மகளிரணி உலக கோப்பையை வெல்லும் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு முதல் போட்டியிலேயே மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது.

- Advertisement -

ஆரம்பிப்பதற்குள் முடிவு:

இந்நிலையில் நியூசிலாந்திடம் சந்தித்த படுதோல்வியால் -2.900 என்ற மோசமான ரன்ரேட்டை பெற்றுள்ள இந்தியா குரூப் ஏ பிரிவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் செமி ஃபைனல் கனவு துவங்குவதற்கு முன்பே கிட்டத்தட்ட நாக் அவுட் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் முதல் போட்டியில் சந்தித்த படுதோல்வியால் இந்தியா செமி ஃபைனல் செல்ல எஞ்சிய 3 போட்டிகளிலும் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அது போன்ற சூழ்நிலையில் இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதே போல 3வது போட்டியில் இலங்கையை தோற்கடித்து இந்தியா வெல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் 2024 ஆசிய கோப்பையில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை சாம்பியன் பட்டத்தை வென்றது.

- Advertisement -

ரொம்ப கஷ்டம்:

மேலும் தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இலங்கை தோற்றது. அதனால் இந்தியாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற நிலையில் இலங்கை விளையாட உள்ளது ஹர்மன்ப்ரீத் அணிக்கு பெரிய சவாலாகும். இவை அனைத்தையும் விட இந்தியா தங்களது கடைசிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. அப்போட்டியில் 6 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை இந்தியா வெல்வது மிகமிக கடினம் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: கனவில் கூட இந்திய அணிக்கு எதிராக வங்கதேச அணியால் இதை செய்ய முடியாது – ரமீஸ் ராஜா ஓபன்டாக்

ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்றில் விளையாடிய 33 டி20 போட்டிகளில் இந்தியா வெறும் 7 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட 6 போட்டிகளில் 2 முறை மட்டுமே இந்தியா தோற்கடித்துள்ளது. எனவே சவாலான ஆஸ்திரேலியாவை வென்று இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய வெற்றிகளை பெற்று இந்தியா செமி ஃபைனலுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement