ஐபிஎல் 2022 தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஏனெனில் இதில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்தால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் 5 கோப்பைகளை வென்ற மும்பை மட்டும் தொடர் தோல்விகளால் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறிவிட்டது. இதில் இந்த வருடம் முதல் முறையாக விளையாடினாலும் புதிய அணிகளாக இருந்தாலும் 55 போட்டிகளின் முடிவில் தலா 16 புள்ளிகளை பெற்று முதல் 2 இடங்களில் இருக்கும் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது 90% உறுதியாகியுள்ளது.

எஞ்சிய 2 இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த இடங்களை தலா 14 புள்ளிகளைப் பெற்று 3 மற்றும் 4 ஆகிய இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பிடிப்பதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. அதேபோல் தலா 10 புள்ளிகளைப் பெற்றுள்ள டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகளுக்கும் 50% அந்த இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
சென்னை தகுதி பெறுமா:
மேலும் தலா 8 புள்ளிகளை பெற்றுள்ள சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கும் குறைவான வாய்ப்புகள் உள்ளது. இதில் டெல்லிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற சென்னை கூடுதல் ரன்ரேட் வெற்றி 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதால் கொல்கத்தாவை விட அந்த அணிக்கு சற்று அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த வருடம் நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் ஜடேஜா தலைமையில் களமிறங்கிய சென்னை ஆரம்பத்திலேயே 4 தோல்விகளை சந்தித்ததால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பாதி பறிபோனது. இருப்பினும் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவி பேட்டிங் – பவுலிங் என தனது ஆட்டத்தை மொத்தமாக பாதித்ததால் மீண்டும் அந்த பொறுப்பை தோனியிடமே ஜடேஜா வழங்கினார். அந்த நிலைமையில் தோனி கேப்டனாக வந்த பின் சற்று வலுவான அணியாக காட்சியளிக்கும் சென்னை ஒருசில பெரிய வெற்றிகளைப் பதிவு செய்ததால் 1% என இருந்த பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 3% சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2008 முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியான வெற்றிகளால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று வந்த ஒரே அணி என்ற சாதனை படைத்து வந்த சென்னை 2020இல் முதல் முறையாக தொடர் தோல்விகளால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் பெரிய அவமானத்தைச் சந்தித்தது. எனவே 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை மீண்டும் அதுபோன்ற அவமானத்தை சந்தித்து விடக்கூடாது என அந்த அணி ரசிகர்கள் கருதுகின்றனர்.

தற்போதைய நிலைமையில் தோனியின் தலைமையில் ஏதேனும் மேஜிக் நிகழ்ந்து தங்களது அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் காணப்படுகிறது. இருப்பினும் அதற்கு ஏதாவது மெடிக்கல் மிராக்கிள் தான் நிகழவேண்டும் என்ற நிலையில் அவர்களின் எண்ணப்படி சென்னை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும், என்ன நிகழ வேண்டும் என்பதைப் பற்றிய கால்குலேட்டர் முடிவுகள் இதோ:
1. முதலில் எதிரணி ரசிகர்கள் கூறுவது போல மும்பை, குஜராத், ராஜஸ்தான் ஆகிய தங்களது கடைசி 3 போட்டிகளில் சென்னை வெற்றி பெற வேண்டும். அதுவும் டெல்லிக்கு எதிராக நேற்று பெற்ற வெற்றியை போல பெரிய வெற்றிகளாக இருந்தால் கூடுதல் பலமாக அமையும்.

2. அத்துடன் மும்பை – கொல்கத்தா மோதும் 56-வது லீக் போட்டியிலும் லக்னோ – குஜராத் மோதும் 57-வது லீக் போட்டியில் யார் வெற்றி தோல்வி பெற்றாலும் அது சென்னையை பாதிக்காது.
3. இருப்பினும் 58-வது போட்டியில் டெல்லியை ராஜஸ்தான் தோற்கடிக்க வேண்டும். மேலும் பஞ்சாப் – பெங்களூரு மோதும் 60-வது போட்டியில் பெங்களூருவை பஞ்சாப் தோற்கடிக்க வேண்டும். கொல்கத்தா – ஹைதெராபாத் மோதும் 61-வது போட்டியில் ஹைதராபாத்தை கொல்கத்தா தோற்கடிக்க வேண்டும்.

5. அதன்பின் லக்னோ – ராஜஸ்தான் மோதும் 63-வது போட்டியில் யார் வென்றாலும் அது சென்னையை பாதிப்புக்காது. ஆனாலும் பஞ்சாப் – டெல்லி பங்கேற்கும் 64-வது போட்டியில் டெல்லி வெற்றி பெற வேண்டும். அதற்கு அடுத்ததாக ஹைதராபாத் – மும்பை மோதும் 65-ஆவது லீக் போட்டியில் மும்பை வெற்றி பெற வேண்டும்.
6. லக்னோ – கொல்கத்தா மோதும் 66-வது போட்டியில் யார் வென்றாலும் அது சென்னைக்கு பின்னடைவை ஏற்படுத்தாது. ஆனாலும் குஜராத் – பெங்களூரு பங்கேற்கும் 67-வது போட்டியில் குஜராத் வெற்றி பெற வேண்டும். அத்துடன் 69-வது லீக் போட்டியில் டெல்லியை மும்பை தோற்கடிக்க வேண்டும்.

7. மேற்கூறிய வகையில் அனைத்தும் நடந்தால் ஹைதராபாத் – பஞ்சாப் மோதும் கடைசி மற்றும் 70-வது லீக் போட்டியில் யார் வென்றாலும் அது சென்னை பிளே ஆப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெறுவதை தடுக்க முடியாது.



