வெறும் 33 வயதில் ஓய்வு.. தெ.ஆ சரவெடி நாயகன் க்ளாஸென் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வான காரணம் அறிவிப்பு

Henrich Klassen
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹென்றிச் க்ளாஸென் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு உள்ளூரில் விளையாடத் துவங்கிய அவருக்கு 2018இல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. சொல்லப்போனால் அந்த வருடம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான கிரிக்கெட்டிலும் அவருக்கு அறிமுகமாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பில் டெஸ்ட் போட்டிகளில் க்ளாஸென் பெரிதாக ஜொலிக்கவில்லை. அதனால் 4 போட்டிகளுக்கு மேல் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தென்னாப்பிரிக்க அணியில் நிலையான இடத்தைப் பிடித்து அசத்தி வந்தார். குறிப்பாக 2023 உலகக்கோப்பையில் மும்பையில் நடைபெற்ற ஒரு போட்டியில் அவர் இங்கிலாந்தை வெளுத்து வாங்கியதை மறக்க முடியாது.

- Advertisement -

திடீர் ஓய்வு:

அதை விட டி20 கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய க்ளாஸென் மேட்ச் வின்னராக உருவெடுத்தார். குறிப்பாக சமீப வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு சரவெடியாக விளையாடிய அவர் வெற்றிகளில் பங்காற்றினார். அதிலும் 2025 சீசனில் கடைசி போட்டியில் ராஜஸ்தானை அடித்து நொறுக்கிய அவர் சதத்தை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

அப்படிப்பட்ட அவர் வெறும் 33 வயதில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்கான காரணம் பற்றி க்ளாஸென் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளது பின்வருமாறு. “எனக்கு இது சோகமான நாள். ஏனெனில் நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளேன். எனக்கும் என்னுடைய குடும்பத்தின் வருங்காலத்திற்கும் எது சிறந்தது என்பதை முடிவெடுக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டேன்”

- Advertisement -

ரசிகர்கள் சோகம்:

“உண்மையில் இது மிகவும் கடினமான முடிவு. ஆனால் இந்த முடிவில் எனக்கு அமைதி உள்ளது. முதல் நாளிலிருந்தே என்னுடைய நாட்டுக்காக விளையாடுவதை கௌரவமாகக் கருதினேன். அதையே இளம் பயனாக இருந்த போது கனவு கண்ட நான் அதற்காக வேலையும் செய்தேன். அங்கே எனது வாழ்நாளில் பொக்கிஷமாக வைத்துக்கொள்வதற்குத் தேவையான நண்பர்களும் கிடைத்தனர். நிறைய மகத்தான நபர்களைப் பார்த்தது என்னுடைய வாழ்க்கையை மாற்றியது. அவர்களுக்கு என்னால் போதுமான நன்றிகளை சொல்ல முடியாது”

இதையும் படிங்க: கம்பேக்னா இப்படி இருக்கனும்.. ஒரே வருடத்தில் 5 சாம்பியன்.. கழற்றி விட்ட பிசிசிஐயை சேர்க்க வைத்த ஸ்ரேயாஸ்

“என்னுடைய குடும்பத்துடன் நிறைய நேரத்தை செலவிட இந்த முடிவு உதவும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்க வாரியம், சக வீரர்கள், ரசிகர்கள், தம்முடைய பயிற்சியாளர்கள் போன்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்காக 4 டெஸ்ட், 60 ஒருநாள், 58 டி20 போட்டிகளில் விளையாடிய க்ளாஸென் 104, 2141, 1000 ரன்களை அடித்துள்ளார். 4 சதங்கள் 11 அரை சதங்களையும் அடித்துள்ள அவர் இனிமேல் ஐபிஎல் போன்ற டி20 தொடரில் மட்டுமே விளையாட உள்ளார்.

Advertisement