ஆஸி பவுலர்களை முரட்டுத்தனமாக அடித்த க்ளாஸென்.. ஏபிடி’யை முந்தி புதிய உலக சாதனை.. 1 ரன்னில் கபில் தேவ் சாதனை மிஸ்

Henrich Klassen 2
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று 2 – 2* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. குறிப்பாக செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற முக்கியமான 4வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 416/5 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு குயின்டன் டீ காக் 45, ரீசா ஹென்றிக்ஸ் 28, கேப்டன் ஐடன் மார்க்ரம் 8, வேன் டெர் டுஷன் 62 என டாப் பேட்ஸ்மேன்கள் ஓரளவு கணிசமான ரன்களை எடுத்தனர். இருப்பினும் 25 ஓவரில் 120/3 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்த அந்த அணியை மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹென்றிச் க்ளாஸெனும் முதல் 25 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து மெதுவாகவே விளையாடினார்.

- Advertisement -

அதிரடி உலக சாதனை:
ஆனால் நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி ஆஸ்திரேலியா பவுலர்களை கருணை காட்டாமல் அடித்து நொறுக்கிய அவர் வெறும் 57 பந்துகளில் சதமடித்தும் ஓயாமல் வேகமாக ரன்களை சேர்த்தார். அதே வேகத்தில் மொத்தம் 13 பவுண்டரி 13 சிக்ஸர்களை பறக்க விட்டு 174 (83) ரன்களை விளாசிய அவருடன் மறுபுறம் தம்முடைய திறமையை காட்டிய டேவிட் மில்லர் 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 82* (45) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்களை எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 417 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 12, மார்னஸ் லபுஸ்ஷேன் 20, மிட்சேல் மார்ஷ் 6, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 18, டிம் டேவிட் 35 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் எதிர்புறம் அலெக்ஸ் கேரி கடுமையாக போராடி 99 (77) ரன்கள் எடுத்தும் 34.5 ஓவரில் 252 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 174 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய க்ளாஸென் ஆட்டநாயகன் விருது வென்றார். அதிலும் 174 ரன்களை 209.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் சாதனை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: தனி ஒருவனாக போராடி 99 ரன்களில் மனமுடைந்த கேரி.. முடித்த ரபாடா, நிகிடி.. வாழ்வா – சாவா போட்டியில் ஆஸியை சாய்த்த தென்னாப்ரிக்கா

இதற்கு முன் கடந்த 2015 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 162* (66) ரன்களை 245.45 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும். அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் 5வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் (174) பதிவு செய்த 2வது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் 1983 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக கபில் தேவ் 5வது இடத்தில் 175* ரன்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

Advertisement