ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே பின்தங்கியது. இருப்பினும் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் 3வது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்த நிலையில் முக்கியமான 4வது போட்டி செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்றது. செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 416 ரன்கள் குவித்து அசத்தியது.
குறிப்பாக குயின்டண் டீ காக் 45, ரீசா ஹென்றிக்ஸ் 28, வேன் டெர் டுஷன் 62 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓரளவு கணிசமான ரன்களை மட்டுமே எடுத்தனர். அதனால் 25 ஓவரில் 120/3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய ஹென்றிச் க்ளாஸென் ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி நேரம் செல்ல செல்ல இரு மடங்கு வேகத்தில் ரன்கள் குவித்து 57 பந்துகளில் சதமடித்தார்.
தென்னாப்பிரிக்கா பதிலடி:
அதே வேகத்தில் 13 பவுண்டரி 13 சிக்சரை பறக்க விட்டு மொத்தம் 174 (83) ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த அவர் கடைசி பந்தில் அவுட்டானார். மறுபுறம் தனது பங்கிற்கு வெளுத்து வாங்கிய டேவிட் மில்லர் 6 பவுண்டரி 5 சிக்சருடன் 82* (45) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதைத்தொடர்ந்து 417 என்ற கடினமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 12, கேப்டன் மிட்சேல் மார்ஷ் 6 ரன்களில் அவுட்டாக டிராவிஸ் ஹெட் காயத்தை சந்தித்து 17 ரன்களில் வெளியேறினார். அந்த நிலையில் மிடில் ஒர்டாரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஸ்ஷேன் 20 ரன்களில் அவுட்டான போதிலும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.
ஆனாலும் அவருக்கு எதிர்ப்புறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கிற முயற்சித்த மார்கஸ் ஸ்டோனிஸ் 18 (13), டிம் டேவிட் 35 (25) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து மனம் தளராமல் தனி ஒருவனாக வெற்றிக்கு போராடிய அலெக்ஸ் கேரி சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் ரபாடாவின் பந்தில் 99 (77) ரன்களில் அவுட்டாகி மனமுடைந்து சென்றார்.
இதையும் படிங்க: பங்களாதேஷ் கிட்ட இதனால தான் தோத்துட்டோம்னு தப்பா நெனச்சிக்காதீங்க. தோல்விக்கு பின் மன்னிப்பு கேட்ட – ரோஹித் சர்மா
அதனால் 34.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டிய தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்த வாழ்வா – சாவா போட்டியில் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 – 2* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்த வெற்றிக்கு லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டுகளும் எடுத்து முக்கிய பங்காற்றிய நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் கடைசி போட்டி வரும் செப்டம்பர் 17இல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.