
ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வெற்றிகரமான 3-வது வாரத்தைக் கடந்து மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இப்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு அனைத்து அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் இந்த தொடரில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் அந்த அணி விளையாடியதை வைத்துப் பார்க்கும்போது இந்த முறை முதல் முறையாக நாம் கோப்பையை முத்தமிடப் போவது உறுதி என்ற உறுதியான நம்பிக்கை பெங்களூரு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அந்த அணியின் ஹர்ஷல் பட்டேல், ஹசரங்கா போன்றவர்கள் பந்துவீச்சில் தேவையானபோது விக்கெட்டுகளையும் கேப்டன் டு பிளசிஸ், விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திரங்கள் பேட்டிங்கில் தேவையான ரன்களையும் எடுத்து வெற்றிக்கு பங்காற்றி வருகிறார்கள்.
மிரட்டல் பினிஷர் டிகே:
ஆனால் அதைவிட அழுத்தம் நிறைந்த கடைசி நேரங்களில் களமிறங்கி அதிரடியாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு ரன்களைக் குவித்து வெற்றியை தேடித் தரும் பினிசர் வேலையை தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் அந்த அணிக்கு கச்சிதமாக செய்து வருகிறார். குறிப்பாக இதுவரை நடந்த 6 போட்டிகளில் அவர் முறையே 32* (14), 14* (7), 44* (23), 7* (2), 34 (14), 66* (34) என கடைசி நேரத்தில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 197* ரன்களை 209 என்ற தெறிக்கவிடும் மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார்.
அதிலும் இந்த 6 போட்டிகளில் 5 முறை அவரை கடைசி வரை அவுட் செய்ய முடியாமல் பந்துவீச்சாளர்கள் தோல்வி அடைந்தனர். குறிப்பாக 6 போட்டிகளில் 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று அபாரமாக செயல்பட்டு வரும் அவர் ஹர்திக் பாண்டியா, எம்எஸ் தோனி, பொல்லார்ட் போன்ற இதர பினிஷர்கள் என அழைக்கப்படும் வீரர்களை விட இந்த வருடம் அசத்தலாக செயல்பட்டு வருவது ரசிகர்களையும் ஜாம்பவான்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
ஏபிடி பூரிப்பு:
அதிலும் இதே பெங்களூர் அணிக்காக கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்து மிகச்சிறந்த பினிஷராக பலமுறை தனி ஒருவனாக பல வெற்றிகளைத் தேடி கொடுத்த தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் இல்லாத குறையை தினேஷ் கார்த்திக் அப்படியே தீர்த்து வருகிறார் என்றே பாராட்ட வேண்டும். ஏனெனில் கடந்த பல வருடங்களாக ரன் மழை பொழிந்து பெங்களூரு மிடில் ஆர்டரின் முக்கிய முதுகெலும்பு வீரராக வலம் வந்த அவர் கடந்த வருட ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்றார். அப்படிப்பட்ட நிலையில் தனது இடத்தில் தினேஷ் கார்த்திக் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் தற்போது இருக்கும் பார்முக்கு ஏற்கனவே 2 – 3 போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். சமீபகாலங்களாக அவர் பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடாத போதிலும் இப்படி ஒரு மிரட்டலான பார்ம் எங்கிருந்து வந்தது என எனக்கு தெரியவில்லை. ஆனால் 360 டிகிரியிலும் அவர் அற்புதமாக பேட்டிங் செய்கிறார். அவரைப் பார்க்கும் போது எனக்கே பேட்டை எடுத்து மீண்டும் களத்தில் சென்று விளையாட வேண்டும் என்று தோன்றுகிறது. மிடில் ஆர்டரில் மிகவும் அழுத்தம் நிறைந்த தருணத்தில் தனது அனுபவத்தை காட்டும் அவர் பெங்களூருவின் இந்த நெடிய பயணத்தில் இதே பார்மை காட்டும் பட்சத்தில் நிச்சயம் நல்ல வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.
கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவிற்காக விளையாடிய அவர் அதன்பின் வாய்ப்பு கிடைக்காத போதிலும் ஐபிஎல் தொடரிலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தமிழகத்திற்காகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இடையில் இங்கிலாந்தில் இந்தியா பங்கேற்ற கிரிக்கெட் போட்டிகளின்போது வர்ணனையாளராகவும் செயல்பட்ட அவர் சமீப காலங்களாக பெரிய அளவில் கிரிக்கெட் விளையாட போதிலும் இந்த அளவுக்கு சரவெடியாக பேட்டிங் செய்யும் பார்ம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை என ஏபி டிவிலியர்ஸ் வியந்துபோய் பாராட்டுகிறார்.
இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அவர் இந்த அளவுக்கு அபாரமாக செயல்படுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. களத்தில் எப்போதும் பிஸியாக காணப்படும் அவர் சமீப காலங்களாக தொடர்ச்சியான கிரிக்கெட்டில் பங்கேற்கவில்லை. கடைசியாக அவர் இங்கிலாந்தில் வர்ணனையாளராக இருந்த போது பார்த்தேன். அதனால் உள்ளூர் கிரிக்கெட்டிலும் பெரும்பாலும் விளையாடாமல் இருந்த அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என நினைத்தேன். ஆனால் தற்போது அவர் காட்டும் எனர்ஜியும் அதிரடி ஆட்டமும் அனைவரையும் வியக்க வைக்கிறது” என்று பாராட்டினார்.