அண்ணன் தம்பிக்குள்ள இதெல்லாம் சகஜம்! அன்று சண்டை போட்டு இன்று பாசமழை பொழியும் இந்திய வீரர்கள்

Deppak Hooda Krunal Pandya
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைத்த நிலையில் வரும் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் முழு மூச்சுடன் மோதி வருகின்றன.

- Advertisement -

இந்த தொடரின் முதல் வாரத்தில் மும்பை, சென்னை உள்ளிட்ட வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் இதுவரை ஒரு வெற்றிகளைக் கூட பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றன. மறுபுறம் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இதுவரை ஒரு கோப்பையை கூட வாங்காத அணிகள் அற்புதமாக செயல்பட்டு வெற்றி நடைபோட துவங்கியுள்ளன.

ஒரே அணியில் தீபக் ஹூடா – க்ருனால் பாண்டியா:
அந்த வகையில் 7000+ கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து தங்களது முதல் சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. அதைவிட அந்த அணியில் இந்திய வீரர்கள் தீபக் ஹூடா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடி வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருவது அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

hooda

ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக ஒரே அணியில் விளையாடி வந்த இவர்கள் கடந்த வருடம் நடந்த சயீத் முஸ்டாக் அலி கோப்பை தொடரின் போது ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டனர். அதிலும் அந்த தொடரில் பங்கேற்பதற்காக வலை பயிற்சி மேற்கொண்டிருந்த போது பரோடா அணியின் கேப்டனாக இருந்த க்ருனால் பாண்டியா தம்மை கெட்ட வார்த்தைகளால் கடுமையாக திட்டியதாக தீபக் ஹூடா குற்றம்சாட்டியது அனைத்து இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதை தொடர்ந்து அது பற்றி விசாரித்த பரோடா அணி நிர்வாகம் தீபக் ஹூடாவுக்கு மட்டும் தடைவிதித்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது.

- Advertisement -

அதன் காரணமாக மனமுடைந்த தீபக் ஹூடா வேறு வழியின்றி ராஜஸ்தான் மாநிலத்திற்கு குடிபெயர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி தற்போது இந்திய அணியில் விளையாட தொடங்கியுள்ளார். அந்த நேரத்தில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவர்களை லக்னோ அணி நிர்வாகம் ஒன்றாக வாங்கிய போதே அனைத்து ரசிகர்களும் வியப்படைந்தனர். அதைத் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் அடித்துக் கொண்ட இவர்கள் ஐபிஎல் தொடரில் எப்படி ஒன்றாக சேர்ந்து சண்டை சச்சரவுகளின்றி விளையாட போகிறார்கள் என ஆவலுடன் பார்த்த ரசிகர்களுக்கு அந்த இருவரும் ட்விஸ்ட் வைத்தார்கள். ஏனெனில் குஜராத்துக்கு எதிராக நடந்த முதல் போட்டியிலேயே ஒரு விக்கெட் விழுந்த போது ஒன்றாக கட்டிப் பிடித்து மகிழ்ச்சியுடன் இவர்கள் கொண்டாடியதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள்.

Deepak Hooda Krunal Pandya

அண்ணன் தம்பி:
இப்படி அன்று சண்டைக் கோழியாக சண்டை போட்டுக் கொண்ட க்ருனால் பாண்டியாவுடன் இன்று ஒன்றாக சேர்ந்துவிளையாடுவதை பற்றி தீபக் ஹூடா முதல்முறையாக மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “க்ருனால் பாண்டியா எனது சகோதரர் போன்றவர். எனவே சகோதரர்களுக்குள் சண்டை வருவது சாதாரணமாகும். அந்த வகையில் லக்னோ அணிக்கு போட்டிகளை வென்று தர வேண்டும் என்ற லட்சத்தில் நாங்கள் விளையாடி வருகிறோம்” என நாங்கள் இருவரும் அண்ணன் தம்பி போன்றவர்கள் என்பதால் எங்களுக்குள் சண்டை வருவது சகஜம் என்பது போல் இந்த விஷயத்தைப் பற்றி ஒற்றை வரியில் தீபக் ஹூடா பதில் அளித்தார்.

- Advertisement -

கடந்த பிப்ரவரி மதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் முதல் முறையாக அறிமுகமான அவர் அதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தற்போது ஐபிஎல் தொடரிலும் அசத்த தொடங்கியுள்ளார். இதேபோல எஞ்சிய ஐபிஎல் தொடரிலும் வரும் காலங்களிலும் அபாரமாக செயல்பட்டு வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடுவதே தனது நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.

hooda 1

இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அனைவரை போலவே இந்தியாவுக்காக உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம். இருப்பினும் அதற்காக கவலைபடாமல் சிறப்பாக செயல்படுவதில் மட்டும் கவனம் செலுத்த உள்ள நான் எஞ்சியதை தேர்வு குழுவினரிடம் விட்டுவிட உள்ளேன்.

இதையும் படிங்க : ஹாட்ரிக் தோல்வியின் கோபத்தை நிருபர் மீது காட்டிய கேப்டன் ரோஹித் – மும்பை ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை

ஒரு ஆல்-ரவுண்டராக இருக்கும் நான் எனது பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவதைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த விரும்பவில்லை” என கூறினார்.

Advertisement