ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு பாதகம் – இந்திய ஜாம்பவான் கவலை

Mccullum-and-Shreyas
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் தொடர் கடந்த 2008இல் துவங்கப்பட்டு 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்து இன்று உலகின் நம்பர்-1 டி20 உருவெடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று த்ரில்லாக அமைந்துள்ளதால் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளை விட உலகின் தரமான கிரிக்கெட் தொடராக ஐபிஎல் உருவெடுத்துள்ளது. அதேபோல் இந்த தொடரில் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடிகளை கல்லா கட்டும் பிசிசிஐ சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசியை விட பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது.

அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் வரும் 2025 முதல் 84, 94 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக ஐபிஎல் தொடரை விரிவுபடுத்துவதற்கான வேலைகளில் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இதனால் உலக அளவில் விரைவில் நம்பர் ஒன் விளையாட்டு தொடராக கிரிக்கெட் உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் குறைவதற்கான அபாயமும் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் பாதகம்:
இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் விளையாடும் தரமான வீரர்களை கண்டறியும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஐபிஎல் அந்த வேலையை கச்சிதமாக செய்து வருகிறது என்றாலும் இடையிடையே நிறைய பாதகங்களையும் இந்திய கிரிக்கெட்டுக்கு ஏற்படுத்தி வருகிறது. 2 மாதங்கள் விளையாடுவதற்கு கோடிகணக்கில் கொடுக்கப்படும் சம்பளம் நாட்டுக்காக வருடம் முழுவதும் விளையாடினாலும் கிடைப்பதில்லை என்பதால் சமீப காலங்களில் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாட நிறைய வீரர்கள் முன்னுரிமை கொடுப்பது அதற்கு உதாரணமாகும்.

மேலும் வெளிநாட்டு வீரர்களை ஐபிஎல் தொடரில் பங்கேற்க சிவப்பு கம்பளம் விரிக்கும் பிசிசிஐ இந்திய வீரர்களை வெளிநாட்டு தொடர்களில் அனுமதிப்பதில்லை. அதனால் இந்திய கால சூழ்நிலைகளை பற்றி நன்கு தெரிந்து கொள்ளும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் சரமாரியாக அடிக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் வெளிநாட்டு சூழ்நிலைகளை அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காத இந்திய வீரர்கள் பல தருணங்களில் வெளிநாடுகளில் திணறுவதை பார்க்க முடிகிறது. அதைவிட இந்த தொடரில் இந்திய வீரர்களுடன் இணைந்து பணியாற்றும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் அவர்களின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை தெரிந்து கொண்டு சர்வதேச போட்டிகளின் போது தங்களது நாட்டுக்கு அல்லது எதிரணிக்கு வேலை செய்யும் போது அதைப் பயன்படுத்தி அவுட்டாக்குவது இந்தியாவுக்கு பாதகமாகிறது.

கவாஸ்கர் கவலை:
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சமீபத்தில் பர்மிங்காம் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் ஐபிஎல் 2022 தொடரில் கொல்கத்தாவின் பயிற்சியாளராக செயல்பட்டு விடைபெற்ற பிரண்டன் மெக்கல்லம் அதன் கேப்டனாக செயல்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறுவார் என்பதை தெரிந்து இங்கிலாந்தின் பயிற்சியாளராக செயல்படும்போது பெவிலியனில் அமர்ந்துகொண்டே ஒற்றை செய்கையால் காலி செய்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் செயல்படுவது சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றிய சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் பயிற்சியாளர்கள் என்று வரும்போது அதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. சர்வதேச அரங்கில் நாட்டுக்காக பயிற்சியாளராக செயல்படும் நிறைய பயிற்சியாளர்கள் ஐபிஎல் தொடரில் நமது வீரர்களின் பலத்தை தெரிந்து கொள்கிறார்கள். அதுவும் இப்போதெல்லாம் கம்ப்யூட்டரிலிருந்து நமது வீரர்களின் பலம் பலவீனம் பற்றிய வீடியோ டேட்டாவை அவர்களால் பார்க்க முடிகிறது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பாதகமாகும்”

“ஏனெனில் அவர்களில் நிறைய பேர் ஐபிஎல் முடிந்ததும் இதர அணிகளுக்கு சென்று தலைமை பயிற்சியாளராக இல்லாவிட்டாலும் துணை பயிற்சியாளராகவும் பேட்டிங் மற்றும் பவுலிங் என ஏதேனும் ஒரு துறையில் ஆலோசகராக செயல்படுகிறார்கள். அவர்களிடம் இந்திய அணி வீரர்களின் பலம் பலவீனம் பற்றிய முழு தகவல்களும் உள்ளன. எனவே இது இந்திய கிரிக்கெட்டுக்கு எந்த சாதகத்தையும் ஏற்படுத்தவில்லை” என்று கூறினார்.

இப்போதெல்லாம் அனைத்து அணிகளிலும் எதிரணி வீரர்களின் பலவீனங்களை கண்டு பிடிப்பதற்காகவே தனியாக டெக்னிக்கல் நிபுணர்கள் எதிரணியை பற்றி அலசி ஆராய்ந்து தகவல்களை கொடுக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்படுபவர்கள் அது போன்ற தகவல்களை நேரடியாக பெற்று சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய அம்சத்தை ஐபிஎல் கொண்டிருப்பது எந்த வகையிலும் இந்திய கிரிக்கெட்டுக்கு உதவாது என சுனில் கவாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார். எனவே வரும் காலங்களில் நிறைய இந்திய பயிற்சியாளர்களை ஐபிஎல் அணி நிர்வாகங்கள் நியமிப்பது பற்றி பிசிசிஐ கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement