உலகின் பிரபலமான கிரிக்கெட் லீக் தொடராகக் கருதப்படும் ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையில் சம்ஸ்கிருத வாசகம் ஒன்று இடம்பெற்றிருக்கும். அதை எப்போதாவது கவனித்திருக்கீறீர்களா?ஐ.பி.எல் தொடரின் 11 வது சீஸனில் தற்போது லீக் போட்டியில் இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி முதலிடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. புள்ளிப்பட்டியலில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி 8 வது இடத்தில் உள்ளது. ஒவ்வோர் அணியும் எதிரணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலின் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும். இதில், முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் மோதும் போட்டியில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அதில், தோல்வியடையும் அணி 3 மற்றும் 4 வது இடங்களைப் பிடித்த அணிகள் மோதும் போட்டியில் வெற்றிபெற்ற அணியுடன் மோதும். அதில் வெற்றிபெறும் அணி, இரண்டாவதாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். ஐ.பி.எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரொக்கப் பரிசுத் தொகையுடன் கோப்பையும் வழங்கப்படும்.
தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்தக் கோப்பையை வெல்லும் அணியிடம் ஒரு வருடம் இந்தக் கோப்பை இருக்கும். அடுத்த தொடர் தொடங்கும்போது மீண்டும் ஐ.பி.எல் நிர்வாகத்திடம் திருப்பி அளிக்கப்படும். இந்த சுழற்சிக் கோப்பையில் சம்ஸ்கிருதத்தில் வாசகம் ஒன்று இடம்பெற்றிருப்பதை ரசிகர்கள் கவனித்திருக்கலாம்.
அதில் ஆங்கிலத்தில், ”Yatra Pratibha Avsara Prapnotihi” என எழுதப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த வாசகத்துக்கு பொருள், ”திறமையும் வாய்ப்பும் சந்திக்கும் இடம்’’ என்பதாகும். இதுதான் ஐ.பி.எல் தொடரின் மோட்டோ ஆகும். பல இளம் வீரர்கள் சர்வதேச வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு இங்கு உருவாக்கப்படுகிறது. ஐ.பி.எல் தொடர் பல இளம் வீரர்களை அடையாளம் காட்டியுள்ளது. நடப்புத் தொடரிலும், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் தீபக் சஹார், மும்பை அணியின் மார்க்கண்டே, ராஜஸ்தான் அணியின் கிருஷ்ணப்பா எனப் பல இளம் வீரர்கள், சர்வதேச வீரர்களுக்குப் போட்டியாக விளையாடி வருகின்றனர்.