ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடுகிறது. அங்கே இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. அந்த 2 போட்டிகளிலும் துணைக் கேப்டன் சுப்மன் கில் 101*, 46 ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றினார்.
அதே போல கேப்டன் ரோஹித் சர்மா 41, 20 ரன்கள் அடித்து அசத்திய நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பினார். பந்து வீச்சு துறையும் ஓரளவு நன்றாக செயல்பட்டு வருவதால் இம்முறை இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் ரோஹித் – கில் ஜோடி இந்த சாம்பியன்ஸ் டிராபியில் மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லா தெரிவித்துள்ளார்.
அம்லா பாராட்டு:
மேலும் இந்திய அணியில் பேட்டிங், பௌலிங் துறையில் நல்ல சமநிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் இத்தொடரை வெல்லும் வாய்ப்பு இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இருப்பதாக அம்லா கூறியுள்ளார். அத்துடன் சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த சூப்பர்ஸ்டார் என்றும் அவர் கணித்துள்ளார்.
இது பற்றி அம்லா பேசியது பின்வருமாறு. “இந்திய அணிக்கு சுப்மன் கில் இருக்கிறார். ஏற்கனவே அவர்களுக்கு ரிஷப் பண்ட் சமீபத்திய காலமாக அசத்தி வருகிறார். தென்னாபிரிக்கா அணியில் எங்களுக்கு ரியான் ரிக்கல்டன் நன்றாக செயல்பட்டு வருகிறார். அது போல ஒவ்வொரு நாட்டிலும் 2 – 3 வீரர்கள் வருங்காலத்தில் அசத்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள்”
இந்தியாவுக்கு வாய்ப்பு:
“ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒரு முறையும் சில இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தக்கூடியவர்களாக தங்களுடைய தலையை உயர்த்துவதை நீங்கள் பார்க்கலாம். அவர்கள் வருங்காலத்தில் சிறந்த பெரிய வீரர்களாக வரலாம். கில் – ரோஹித் ஆகியோரால் இந்திய அணியிடம் ஆபத்தான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இருக்கிறது”
இதையும் படிங்க: இந்தியாவிடம் வேலையாகாது.. பாபர் அந்த மாதிரி கத்துக்குட்டிகளை தான் வெளுப்பாரு.. டேனிஷ் கனேரியா
“பின்னர் மூன்றாவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார். எனவே இந்தியா கோப்பையை வெல்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் கடந்த 15 வருடங்களாகவே சிறந்த அணியைக் கொண்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவும் பவுலிங், பேட்டிங் துறைகளில் நல்ல சமநிலையைக் கொண்டிருப்பதால் கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது. அவர்கள் டாப் 4 அணிகளுக்குள் நுழைந்து கொப்பையை வெல்வார்கள்” என்று நம்புகிறேன்.



