ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. 29 வருடங்கள் கழித்து தங்களுடைய நாட்டில் நடைபெறும் அந்த ஐசிசி தொடரில் பாகிஸ்தான் நடப்பு சாம்பியனாக களமிறங்கியது. அதனால் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி முகமது ரிஸ்வான் தலைமையில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.
குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற பாகிஸ்தான் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு வழக்கம் போல பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் பாபர் அசாம் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. அதிலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் 23 (26) ரன்களில் அவுட்டாகி சென்றது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
தடுமாறும் பாபர்:
ஏனெனில் இப்படிப்பட்ட அவரைத்தான் பாகிஸ்தான் ரசிகர்கள் விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன், உலக கிரிக்கெட்டின் கிங் என்று கண்மூடித்தனமாக கொண்டாடுகிறார்கள். மறுபுறம் உண்மையான கிங் என்று போற்றப்படும் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் இந்தியா போன்ற டாப் அணிகளுக்கு எதிராக பாபர் அசாமால் ரன்கள் அடிக்க முடியாது என்று முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.
ஏனெனில் பெரிய அணிகளுக்கு எதிராக அசத்தும் திறமையும் நோக்கமும் அவரிடம் இல்லை என்று கனேரியா சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாபர் அசாம் நீண்ட காலமாக ரன்கள் துதிக்கவில்லை. அவர் ரன்கள் குவித்தால் அது ஜிம்பாப்வே அல்லது சிறிய அணிகளுக்கு எதிராக மட்டுமே வருகிறது. பெரிய அணிகளுக்கு எதிராக ரன்கள் குவிக்கும் நோக்கம் அவரிடம் இல்லை”
சுமாரான பாகிஸ்தான்:
“நல்ல பெரிய பாகிஸ்தான் அணியில் பேட்டிங் வரிசையில் ஆழம் இல்லை. சல்மான் ஆகா, குஷ்தில் ஷா சில நேரங்களில் மட்டுமே அசத்துகிறார்கள். சௌத் ஷாக்கீல் டெக்னிக்கல் அளவில் சரியான பேட்ஸ்மேன். ஆனால் கேப்டன் முகமது ரிஸ்வானின் பேட் வேலை செய்வதை நிறுத்தியுள்ளது போல் தெரிகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட போதே அவர்கள் விரைவில் வெளியேறுவார்கள் என்பது தெரிந்தது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு மட்டும் ஒரு நியாயமா? அதைப் பற்றி கவலையில்லாம இங்கிலாந்து வரும்.. பட்லர் மறைமுக விமர்சனம்
உண்மையை திரும்பிப் பார்த்தால் சமீப காலங்களில் கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக கூட பாபர் அசாம் அசத்துவதில்லை. அதனாலேயே 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் தோற்றது. 2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவிடம் தோற்ற பாகிஸ்தான் சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் டெஸ்ட் தொடரில் வீழ்ந்தது.



