ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதே போல நியூசிலாந்து அணியும் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
மறுபுறம் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் அடுத்தடுத்த தோல்விகளால் 5 நாட்களில் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி தங்களது முதல் போட்டியிலேயே 350க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தும் ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக செமி ஃபைனல் செல்வதற்கு பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தானை கட்டாயம் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இங்கிலாந்து தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஒரு நியாயம்:
முன்னதாக இந்தத் தொடரில் இந்தியா பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது என்று அறிவித்து விட்டது. அதன் காரணமாக இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடும் என்று ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அது இந்திய அணிக்கு பெரிய சாதகத்தை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக ஒரே மைதானத்தில் விளையாடுவதால் இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டிய அலைச்சல் இல்லை, பிட்ச் எப்படி இருக்கும் என்பது தெரியும், அதை வைத்து ப்ளேயிங் லெவனை எளிதாக தேர்வு செய்ய முடியும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தியாவுக்கு ஒரு நியாயம் தங்களைப் போன்ற மற்ற அணிகளுக்கு ஒரு நியாயம் என்ற வகையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்படுவதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
பட்லர் அதிருப்தி:
இருப்பினும் அதைப் பற்றி கவலைப்படாமல் தங்களது போட்டிகளில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி பட்லர் பேசியது பின்வருமாறு. “இது ஏற்கனவே தனித்துவமான தொடராக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் அனைவரும் தொடர் நடைபெறும் இடத்தில் விளையாடுகிறோம். ஒரு அணி மட்டும் வித்தியாசமான இடத்தில் விளையாடுகிறது”
இதையும் படிங்க: சுப்மன் கில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்த அவர் எடுத்த இந்த முயற்சிகள் தான் காரணம் – வாசிம் ஜாபர்
“ஆனால் அதற்காக தற்சமயத்தில் நான் அதிகமாக கவலைப்படவில்லை. எங்களுடையப் பயிற்சிகளில் கவனம் செலுத்தி அடுத்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக தயாராகி வருகிறோம்” என்று கூறினார். முன்னதாக கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிராக 3 வெவ்வேறு மைதானங்களில் விளையாடியும் 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.



