
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியானது குவாலியர் நகரில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய போட்டியில் இந்திய அணியை சேர்ந்த 22 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் டெல்லி அவரது சொந்த ஊர் என்பதால் உள்ளூர் வீரரான அவரை விளையாட வைப்பது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
அதோடு ஏற்கனவே கொல்கத்தா அணியில் கம்பீர் ஹர்ஷித் ராணாவின் திறனை பார்த்திருப்பதாலே அவருக்கு இந்த போட்டியில் அறிமுகமாக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷித் ரானா 13 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதுமட்டும் இன்றி களத்தில் ஆக்ரோஷமாகவும் செயல்பட்டு அழுத்தமான நேரங்களில் மிகச்சிறப்பாக பந்துவீசும் திறன் படைத்தவர் என்பதனால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : புஜாரா, ரஹானே இல்லனாலும் அந்த 2 இந்திய வீரர்களை சமாளிப்பது கஷ்டம் – ஷேன் வாட்சன் பேட்டி
இதன் காரணமாக இன்றைய இரண்டாவது டி20 போட்டியில் கடந்த போட்டியில் அறிமுகமான ஆல்ரவுண்டர் நித்திஷ் ரெட்டி வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அறிமுகமாக வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.