இந்தியாவில் துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்கியது. தற்போது துவங்கியுள்ள முதல் ரவுண்டில் அனந்தபூரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா டி அணி சுமாராக பேட்டிங் செய்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பாக அந்த அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9, தேவ்தூத் படிக்கல் 0, கேஎஸ் பரத் 13 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 48-6 என தடுமாறிய அந்த அணி 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
காப்பாற்றிய அக்சர் படேல்:
இருப்பினும் அப்போது நங்கூரமாக விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் அக்சர் பட்டேல் 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் அரை சதமடித்து 86 ரன்கள் குவித்து இந்தியா டி அணியை ஓரளவு காப்பாற்றினார். இந்தியா சி அணி சார்பில் அதிகபட்சமாக விஜயகுமார் 3, ஹுமான்சூ சவ்கான் 2, அன்சுல் கொம்போஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சி அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5, சாய் சுதர்சன் 7 ரன்களில் ஹர்ஷித் ராணா வேகத்தில் அவுட்டானார்கள். அதைத்தொடர்ந்து வந்த ஆர்யன் ஜுயல் 12, ரஜத் படிடார் 13 ரன்களில் அக்சர் படேல் சுழலில் அவுட்டானார்கள். அதனால் 43-4 என தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற இந்தியா சி அணி இரண்டாவது நாள் முடிவில் 91-4 ரன்கள் எடுத்துள்ளது.
பிசிசிஐ கவனிக்குமா:
அந்த அணிக்கு களத்தில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் 15*, அபிஷேக் போரேல் 32* ரன்களுடன் போராடி வருகின்றனர். முன்னதாக இப்போட்டியில் இந்தியா சி அணி கேப்டன் ருதுராஜ் வேகப்பந்து வீச்சளார் ஹர்ஷித் ராணா வேகத்தில் அவுட்டானதால் ஏமாற்றுத்துடன் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தார். ஆனால் அவரை அவுட்டாக்கிய ஹர்ஷித் ராணா கையால் வாயில் முத்தமிட்டு அதை ருத்ராஜ்க்கு காற்றில் பறக்க விட்டு கொண்டாடினார்.
இதையும் படிங்க: சச்சின், கங்குலி காலம் மாறிடுச்சு.. இந்திய பேட்ஸ்மேன் ஸ்பின்னர்களிடம் தடுமாற இதான் காரணம்.. சேவாக்
ஐபிஎல் 2024 தொடரில் மயங் அகர்வால் விக்கெட்டை எடுத்த போது இதே போல முத்தமிட்ட ஹர்ஷித் ராணா காற்றில் பறக்க விட்டு வெறித்தனமாக கொண்டாடினார். அதற்கு முதலில் அபராதம் விதித்த பிசிசிஐ பின்னர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் தடை விதித்தது. ஆனால் அப்போதும் திரும்பாத ஹர்ஷித் ராணா அப்படியே கொண்டாடியதால் மீண்டும் பிசிசிஐ கவனித்து தண்டனை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.