இந்திய கிரிக்கெட் நல்லபடியாக தகனம் செய்யப்பட்டது. என்னங்க இது – ஹர்ஷா போக்ளே குமுறல்

Bhogle
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஆரம்பத்தில் 2 தொடர்களையும் இந்தியா வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோசமாக செயல்பட்ட இந்தியா தென்ஆப்பிரிக்காவிடம் அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வி படுதோல்வியை சந்தித்தது. முன்னதாக டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா அடுத்த 2 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து 2 – 1 என தொடரை இழந்தது மட்டுமல்லாமல் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தையும் பறிகொடுத்தது.

குமுறும் இந்தியா:
அதன்பின் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு படி மேலே சென்ற கேஎல் ராகுல் தலைமையிலான இந்தியா படுமோசமாக விளையாடி 3 – 0 என ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. விராட் கோலி, ராகுல், பும்ரா என இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருந்த போதிலும் அனுபவமே இல்லாத தென்னாப்பிரிக்காவிடம் சரணடைந்து படுதோல்வியை சந்தித்துள்ளது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தை குமுற செய்துள்ளது.

- Advertisement -

தகனம் செய்யப்பட்டது:
இந்திய அணியின் இந்த படுதோல்வியால் மனமுடைந்துள்ள இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வல்லுனர் ஹர்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில், “இது தென்ஆப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய வெற்றி. அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். தற்போது இந்தியா நல்லபடியாக தகனம் செய்யப்பட்டது” என பதிவிட்டுள்ளார். இந்த படுதோல்வி பற்றி இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர்,

“தோல்விகள் எப்போதும் தைரியமான முடிவுகளை எடுக்க வித்திடுகிறது. இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் டெம்ப்ளேட்டை மாற்ற வேண்டியுள்ளது. இந்திய அணியில் புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.

- Advertisement -

அத்துடன் பந்துவீச்சில் சொதப்பும் புவனேஷ்வர் குமாருக்கு பதில் தீபக் சஹருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது மட்டுமல்லாமல் பல முன்னாள் இந்திய வீரர்கள் இந்தியாவின் தோல்வி பற்றி தங்களது விரக்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.

கேப்டன் விராட் கோலி:
இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டன்ஷிப் செய்து வந்த விராட் கோலி தற்போது அந்த பதவியில் இருந்து விலகியது இந்திய கிரிக்கெட்டை சற்று நிலைகுலைய செய்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் கடந்த 2017 முதல் வெற்றியோ தோல்வியோ இந்திய அணி நிர்வாகம் மற்றும் தலைமையில் எந்தவித குழப்பமும் இல்லாமல் இந்திய அணி நடை போட்டது.

- Advertisement -

ஆனால் கடந்த 3 – 4 மாதத்துக்குள் இந்தியாவின் கேப்டன்ஷிப் பொறுப்பில் நிகழ்ந்த பல்வேறு எதிர்பாராத மாற்றங்கள் இந்திய அணியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மையாகும். தரமான வீரர்கள் இருந்தபோதும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பெற்ற வைட்வாஷ் தோல்வி அதற்கு எடுத்துக்காட்டாகும்.

ரோஹித் காப்பாற்றுவாரா:
இப்படிபட்ட வேளையில் இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு நீண்ட காலம் தொடர கூடாது என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாகும். ரவி சாஸ்திரி – விராட் கோலி என்ற கூட்டணி போய் தற்போது உருவாகியுள்ள ராகுல் டிராவிட் – ரோகித் சர்மா கூட்டணி இந்திய கிரிக்கெட்டின் தலைமை பொறுப்பில் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சம்பள பிரச்சனையால் பிரபல கிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய சச்சின் டெண்டுல்கர் – என்ன நடந்தது?

ஏற்கனவே ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் ரோகித் முழுநேர கேப்டன் பொறுப்பேற்றுள்ள நிலையில் டெஸ்ட் போட்டிக்கும் அவர் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள தற்காலிக சரிவிலிருந்து இந்தியாவை ரோகித் சர்மா தான் காப்பாற்ற வேண்டும்.

Advertisement