இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் அப்போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 சதங்களை அடித்து இந்தியா அற்புதமான சாதனை படைத்தது.
இருப்பினும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காததும், 7 கேட்ச்கள் தவற விட்டதும் தோல்விக்கு முக்கிய காரணமானது. இதைத் தொடர்ந்து 2வது போட்டி ஜூலை 2ஆம் தேதி இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணியினர் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திடீரென ஹர்ப்ரீத் ப்ரார்:
அந்த பயிற்சியில் சிராஜ் உள்ளிட்ட பவுலர்களை கௌதம் கம்பீர் அதிக நேரம் பேட்டிங் பயிற்சிகளை செய்ய வைத்தார். குறிப்பாக லோயர் ஆர்டர் பேட்டிங் சரிவை தடுப்பதற்காக இந்திய பவுலர்கள் அனைவருமே எக்ஸ்ட்ரா பயிற்சிகளை எடுத்தார்கள். அதே பயிற்சியில் சம்பந்தமின்றி இளம் வீரர் ஹர்ப்ரீத் ப்ரார் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பவுலிங் செய்தார்.
சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அசத்தி வரும் அவர் நல்ல ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ் போன்றவர்களின் விக்கெட்டை எடுத்த அவர் திடீரென இந்திய அணியின் பயிற்சியில் இணைந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் அவர் பவுலிங் செய்யும் வீடியோவை பிசிசிஐ தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தது.
கேப்டன் கில் மெசேஜ்:
இந்நிலையில் இந்திய கேப்டன் சுப்மன் கில் தான் தமக்கு மெசேஜ் செய்து பயிற்சியில் பவுலிங் செய்ய வருமாறு அழைத்ததாக ஹர்ப்ரீத் ப்ரார் கூறியுள்ளார். இது பற்றி பிசிசிஐ வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய மனைவி ஸ்வின்டன் நகரில் இருக்கிறார். அது பர்மிங்கம் நகருக்கு மிகவும் அருகில் இருக்கிறது அங்கிருந்து. இங்கே 1 – 1.5 மணி நேரத்தில் பயணம் செய்து வந்து விடலாம்”
இதையும் படிங்க: ஒரு மேட்ச் அதிசயம்ன்னு நிரூபிக்காம ரிஷப் பண்ட்டை ஃபாலோ பண்ணனும்.. கேஎல் ராகுல் பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர்
“சுப்மன் கில்லுடன் பேசினேன், நேற்று எனக்கு அவர் மெசேஜ் செய்தார். எனவே இங்கே பயிற்சிக்கு செல்லலாம் என்று நான் நினைத்தேன்” எனக் கூறினார். பர்மிங்காம் பிட்ச் கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதை சமாளிப்பதற்காக ஹர்ப்ரீத்தை வைத்து கேப்டன் சுப்மன் கில் பயிற்சிகளை எடுக்க நினைத்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



