- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்ன ஆச்சர்யம்! உலககோப்பை என்றால் விஸ்வரூபம் எடுக்கும் இந்திய நட்சத்திரம் – அசத்தும் புள்ளிவிவரம்

கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று துவங்கிய ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பையில் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த அசத்தியுள்ளது.

குறிப்பாக பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் பரிதாப தோல்வி அடைந்தது.

- Advertisement -

2-வது மிகப்பெரிய வெற்றி:
அதை தொடர்ந்து வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த தனது 3-வது லீக் போட்டியில் விளையாடிய இந்தியா 155 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. நியூசிலாந்தின் ஹமில்டன் நகரில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 317/8 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த இந்தியா மகளிர் உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 300 ரன்களை கடந்து தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து 318 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 100/0 ரன்களை குவித்து அட்டகாசமான தொடக்கத்தை பெற்று வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் அப்போது சுதாரித்த இந்திய வீராங்கனைகள் அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனால் 100/0 என நல்ல நிலையில் இருந்த அந்த அணி சீட்டுக்கட்டு சரிவது போல் தங்களது விக்கெட்டுகளை மளமளவென பரிசளித்து வெறும் 162 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோல்வி அடைந்தது.

- Advertisement -

பார்ம்க்கு திரும்பிய ஹர்மன்ப்ரீத்தி கௌர்:
முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 78/3 என ஓரளவு சுமாரான தொடக்கத்தை மட்டுமே பெற்றது. அப்போது துணை கேப்டன் ஹர்மன்ப்ரீட் கௌர் உடன் ஜோடி சேர்ந்த நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார். தொடர்ந்து ஜோடி சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பந்தாடிய இந்த ஜோடியில் இருவருமே அதிரடியாக ரன்களை குவித்து சதம் அடித்து அசத்தினார்கள்.

இறுதியில் 4வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்த இந்த ஜோடி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. இதில் 119 பந்துகளில் 123 ரன்கள் விளாசிய ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி விருது வென்று அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்து பேட்டிங்கில் மிரட்டிய ஹர்மன்பிரீத் கவுர் 107 பந்துகளில் 109 ரன்கள் குவித்து அசத்தினார். சொல்லப்போனால் கடந்த சில வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் திண்டாடி வந்த அவர் இந்த போட்டியில் சதமடித்ததால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார் என்றே கூறலாம்.

- Advertisement -

உலகக்கோப்பையில் விஸ்வரூபம்:
ஆம் கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பிரம்மாண்ட பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் தனி ஒருத்தியாக போராடி 175* ரன்கள் விளாசி இந்தியாவை பைனலுக்கு அழைத்துச் சென்றதை யாராலும் மறக்க முடியாது. அதன்பின் கடந்த 4 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வந்த அவர் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வந்ததுடன் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வந்தார்.

ஆனால் தற்போது உலக கோப்பை போன்ற ஒரு முக்கியமான போட்டியில் சதமடித்து ஃபார்ம்முக்கு திரும்பி உள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்துள்ளது. இது மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இப்போட்டியில் சதமடித்த அவர் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். உலககோப்பைகளில் இதுவரை 3 சதங்களை அடித்துள்ள அவர் முதலிடம் பிடித்து இந்த சாதனை படைத்துள்ளார். ஸ்மிருதி மந்தனா மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் தலா 2 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.

சொல்லப்போனால் உலக கோப்பை என்று வந்துவிட்டால் இவர் விஸ்வரூபம் எடுக்கிறார் என்றே கூற வேண்டும். ஆம் இதுவரை மகளிர் உலகக் கோப்பைகளில் 18 இன்னிங்சில் விளையாடிய ஹர்மன்பிரீட் கவூர் அதில் 3 அரை சதங்கள் மற்றும் 3 சதங்கள் உட்பட 743 ரன்களை 53.07 என்ற மிகச் சிறப்பான சராசரி விகிதத்தில் 97.12 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட் விகிதத்தில் குவித்து நம்மை பிரமிக்க வைக்கிறார். அதிகபட்ச ஸ்கோர் 175* ஆகும்.

அதே உலக கோப்பையை தவிர்த்து எஞ்சிய ஒருநாள் போட்டிகளில் 78 இன்னிங்சில் விளையாடியுள்ள அவர் அதில் 2106 ரன்களை 31.43 என்ற சுமாரான சராசரியில் 64.41 என்ற ஓரளவு சுமாரான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ளார். இதில் வெறும் 1 சதமும் 11 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 103 ஆகும். மொத்தத்தில் உலக கோப்பை என்று வந்துவிட்டால் இவர் அபாரமாக செயல்படுகிறார் என்பது ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.

- Advertisement -
Published by