ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்தியா புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. நவி மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 299 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87, ஸ்மிருதி மந்தனா 45, தீப்தி சர்மா 58, ரிச்சா கோஸ் 34 ரன்கள் அடித்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை 246க்கு சுருட்டிய இந்தியாவின் வெற்றிக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா 5, ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினர். முன்னதாக அப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 2 விழுந்த பின் கேப்டன் லாரா – சுனே லஸ் ஜோடி சேர்ந்து சரிவை சரி செய்து இந்தியாவுக்கு சவாலாக மாறினார்கள்.
ஷபாலிக்கு சல்யூட்:
அப்போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பகுதி நேர பவுலரான ஷபாலி வர்மாவை பவுலிங் செய்ய அழைத்தார். ஆச்சரியப்படும் வகையில் அந்த வாய்ப்பில் முதல் 7 பந்துகளிலேயே ஷபாலி 2 விக்கெட்டுகள் எடுத்தது திருப்பு முனையாக அமைந்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. அதற்கான காரணம் மற்றும் இந்தியாவின் வரலாற்று வெற்றி பற்றி ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியது பின்வருமாறு.
“எல்லா மேடு பள்ளங்களிலும் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்காக நான் நன்றியுடையவளாக இருக்கிறேன். 3 தொடர்ச்சியான போட்டிகளில் தோற்ற பின்பும் நாங்கள் தன்னம்பிக்கை பற்றி பேசினோம். விஷயங்களை திருப்ப நாங்கள் ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். வெற்றி பெறுவதற்கு நேர்மறையாக இருந்து அனைவரும் அசத்துவது முக்கியம்”
ஆரம்பம் மட்டுமே:
“வெற்றிக்காக பகலிரவாக உழைத்த எங்கள் அணி இதற்கு தகுதியானவர்கள். லாரா – சுனே ஆகியோர் நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஷபாலி அங்கே நின்று கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவர் பேட்டிங் செய்த விதத்தில் இன்றைய நாள் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் என்னுடைய தைரியமான உணர்வை பின்பற்ற முடிவெடுத்தேன். ஷபாலிக்கு ஒரு ஓவரையாவது கொடு என்று என்னுடைய இதயம் சொன்னது”
“அதுவே திருப்புமுனையாக அமைந்தது. கடைசி நேரத்தில் அணிக்கு வந்த போது அவருக்கு 2 – 3 ஓவர்கள் கொடுப்பதைப் பற்றி பேசினோம். அதற்கு 10 ஓவர்கள் கொடுத்தாலும் வீசத் தயாராக இருக்கிறேன் என்று சொன்ன ஷபாலிக்கு சல்யூட் செய்கிறேன்” என்று கூறினார். அத்துடன் ஃபைனலில் எந்த இலக்கையும் சேசிங் செய்வது அழுத்தமானது என்பதால் இந்த பிட்ச்சில் 299 ரன்கள் போதும் என்று நினைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கபில் தேவ், தோனிக்கு நிகராக வரலாறு படைத்த ஹர்மன்ப்ரீத்.. 36 வயதில் 20 வருட புதிய உலக சாதனை
சேசிங்கை நன்றாக துவங்கிய தென்னாப்பிரிக்கா கடைசி நேரத்தில் தடுமாறியதை பயன்படுத்தி இந்தியா வென்றதாக ஹர்மன்ப்ரீத் தெரிவித்துள்ளார். தீப்தி சர்மா தொடர் முழுவதும் தேவைப்பட்ட சமயங்களில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்ததாகவும் அவர் பாராட்டினார். இந்த வெற்றிக்கு உதவிய பயிற்சியாளர்கள், பிசிசிஐ ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். அணியில் அதிகம் மாற்றம் செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்த ஹர்மன்ப்ரீத் கௌர் இந்த வெற்றி பல வருங்கால வெற்றிகளின் ஆரம்பம் மட்டுமே என்று கூறியது குறிப்பிடத்தக்கது.



