கபில் தேவ், தோனிக்கு நிகராக வரலாறு படைத்த ஹர்மன்ப்ரீத்.. 36 வயதில் 20 வருட புதிய உலக சாதனை

- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று இந்தியா புதிய சரித்திரம் படைத்தது. நேற்று நவி மும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 299 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87, ஸ்மிருதி மந்தனா 45, தீப்தி சர்மா 58, ரிச்சா கோஸ் 34 ரன்கள் அடித்து அசத்தினார்கள். அடுத்ததாக சேசிங் செய்த தென்னாப்பிரிக்காவை 246 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா மகளிர் கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அதிகபட்சமாக கேப்டன் லாரா சதமடித்து 101 ரன்கள் குவித்தும் தென்னாப்பிரிக்கா தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

கபில் தேவ், தோனிக்கு பின்:

இந்திய அணிக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா 5, ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 1978 முதல் மகளிர் உலகக் கோப்பைகளில் விளையாடி வரும் இந்தியா கடந்த காலங்களில் மிதாலி ராஜ் போன்ற கேப்டன்கள் தலைமையில் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்தது. இருப்பினும் இம்முறை ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் கோப்பையை வென்று இந்தியா வரலாறு படைத்துள்ளது.

இதன் வாயிலாக கபில் தேவ் (1983) மற்றும் எம்.எஸ். தோனி (2011) ஆகியோருக்கு பின் உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையை ஹர்மன்ப்ரீத் கௌர் படைத்துள்ளார். அத்துடன் 36 வருடம் 239 நாட்கள் வயதில் அவர் உலகக் கோப்பையை வென்றுள்ளார். அதன் வாயிலாக மிகவும் அதிக வயதில் மகளிர் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற உலக சாதனையை ஹர்மன்ப்ரீத் கௌர் படைத்துள்ளார்.

- Advertisement -

36 வயதில் சாதனை:

இதற்கு முன் கடந்த 2005 உலக கோப்பையை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க் 34 வருடம் 212 நாட்களில் வென்றதே முந்தைய சாதனை. அந்த 20 வருட சாதனையை தற்போது இந்திய கேப்டன் முறியடித்துள்ளார். அப்போட்டியின் முடிவில் முன்னாள் இந்திய ஜாம்பவான் வீராங்கனைகள் மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோரை ஹர்மன்ப்ரீத் மைதானத்துக்கு வர வைத்தார்.

இதையும் படிங்க: சச்சின் சார் இந்த பூஸ்ட் கொடுத்தாரு.. இந்தியாவுக்காக கடவுள் தான் என்னை அனுப்பி வெச்சாரு.. ஆட்டநாயகி ஷபாலி பேட்டி

தற்போதைய இந்திய அணியை கட்டமைப்பதற்கு முக்கிய பங்காற்றிய அவர்கள் நிறைய ஆலோசனைகள் மற்றும் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்கள். எனவே அவர்களுடைய கையில் கோப்பையை கொடுத்த ஹர்மன்ப்ரீத் வெற்றியைத் தம்மை வளர்த்த முன்னாள் சீனியர் வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். அவருடைய செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement