ஐசிசி 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா இறுதிப்போட்டியில் தகுதி பெற்றது. அக்டோபர் 30ஆம் தேதி நவி மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 339 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியா 48.3 ஓவரில் 341/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அந்த வெற்றிக்கு ஜெமிமா ரோட்ரிகஸ் சதத்தை அடித்து 127*, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 89 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றினர். அதன் வாயிலாக ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் நாக் அவுட் போட்டியில் 300+ ரன்கள் வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது. அத்துடன் மகளிர் உலகக் கோப்பையில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக துரத்திய அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்தது.
தனியாள் அல்ல:
இதைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. வரலாற்றில் ஒருமுறை கூட மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா ஐசிசி கோப்பையை வென்றதில்லை. எனவே 2011 போல சொந்த மண்ணில் இந்தியா மகளிர் உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு கோடிக்கணக்கான ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் ரசிகர்கள் தங்களுக்கு மிகப்பெரிய ஆதரவளிப்பதாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் தெரிவித்துள்ளார். எனவே தாங்கள் தனியாளாக இல்லையென்று உணர்வதாக தெரிவிக்கும் அவர் கோடிக்கணக்கான இந்திய மக்கள் மற்றும் ரசிகர்களுக்காக உலக கோப்பையை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இந்தியர்களுக்காக வெல்வோம்:
“வெற்றிக்கு இன்னும் ஒரு போட்டி இருக்கிறது. நாங்கள் நன்றாக விளையாடியதால் கிடைத்த வெற்றியில் மகிழ்ச்சி. ஆனால் நாங்கள் ஏற்கனவே ஃபைனல் பற்றிய பேச்சுக்களை துவங்கி விட்டோம். அது நாங்கள் உலகக்கோப்பையை வெல்வதில் எந்தளவுக்கு ஆர்வம் மற்றும் கவனத்துடன் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. உலகக் கோப்பையை சொந்த மண்ணில் விளையாடுவது ஸ்பெஷல்”
இதையும் படிங்க: ஷிவம் துபேவை விட அவர் பெரிய ஆளா? என்னங்க இதெல்லாம்? கவுதம் கம்பீரின் முடிவை – விளாசும் ரசிகர்கள்
“இங்கே நாங்கள் எங்களுடைய ரசிகர்கள் மற்றும் குடும்பங்களுக்கு வெற்றியைப் பரிசாக திரும்பிக் கொடுத்த விரும்புகிறோம். இன்னும் ஒரு போட்டியில் எங்களுடைய சிறந்த ஆட்டத்தைக் கொடுப்போம். நாங்கள் தனியாக இல்லை. ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியும் வந்து ஆதரவளித்து எங்களைத் தள்ளுகிறார்கள். நாங்கள் தோல்வியை சந்தித்த போது கூட உலகக்கோப்பை இன்னும் முடியவில்லை என்பதால் நிலைமையை மாற்ற முடியும் என்று அவர்கள் எங்களுக்கு நம்பிக்கை சொன்னார்கள். மொத்த நாடும் எங்களுடன் இருக்கிறது” என்று கூறினார்.



