சர்வதேச கிரிக்கெட்டில் 1992 உலகச் சாம்பியன் பாகிஸ்தான் தற்சமயத்தில் திணறலாக விளையாடி வருகிறது. சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்க போன்ற கத்துக்குட்டிகளிடம் தோற்ற அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் மண்ணைக் கவ்வியது. இதற்கிடையே பரம எதிரி இந்தியாவிடமும் தொடர்ந்து பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்து வருகிறது.
அந்த வரிசையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ஒரு வெற்றியைக் கூட பெறாத பாகிஸ்தான் பரிதாபமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத அணி என்ற மோசமான உலக சாதனையையும் பாகிஸ்தான் சமன் செய்தது. அந்த தோல்விக்கு முகமது ரிஸ்வான், பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காரணமாக அமைந்தனர்.
தொடரும் தோல்விகள்:
அதனால் ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் வாரியம் அவர்களை அடுத்ததாக நியூஸிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கழற்றி விட்டுள்ளது. மேலும் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு புதிய வீரர்களுக்கு பாகிஸ்தான் நிர்வாகம் வாய்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் அந்த புதிய வீரர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது.
அதன் காரணமாக மீண்டும் பாகிஸ்தான் அணி விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் எப்படியாவது பாகிஸ்தான் அணி தோற்க வேண்டும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களே நினைக்கும் கொடுமை தங்கள் நாட்டில் நிலவுவதாக ஹரிஷ் ரவூப் கூறியுள்ளார். குறிப்பாக பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற நீக்கப்பட்ட வீரர்களின் ரசிகர்கள் தற்போதைய பாகிஸ்தான் அணி தோற்க வேண்டுமென்று வேண்டிக் கொள்வதாக மறைமுகமாக ரவூப் வேதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பரிதாபம்:
இது பற்றி ரவூப் பேசியது பின்வருமாறு. “விமர்சனம் என்பது பாகிஸ்தானில் இப்போதெல்லாம் பொதுவாகி விட்டது. எங்கள் அணியில் இருப்பவர்கள் இளம் வீரர்கள். உலகில் எந்த அணியிலும் இளம் வீரர்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுப்பார்கள். தொடர்ச்சியாக 10 – 15 போட்டிகளில் வாய்ப்பு கொடுத்தால் தான் அவர்களால் நல்ல வீரர்களாக வர முடியும்”
இதையும் படிங்க: அவங்க 4 பேரும் ஏ பிளஸ் கிரேட் ஒப்பந்தத்தில் தான் தொடர்வார்கள்.. வெளியாகவுள்ள பி.சி.சி.ஐ – ஊதிய ஒப்பந்தம்
“சர்வதேச கிரிக்கெட்டுக்கு வரும் யாராக இருந்தாலும் ஆரம்பத்தில் தடுமாறுவார்கள். அதைப் புரியாமல் வரும் விமர்சனங்கள் சாதாரணமாகி விட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எப்படியாவது தோற்க வேண்டும் என்று எங்கள் நாட்டில் பலரும் காத்திருப்புடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது தான் அவர்களால் விமர்சிக்க முடியும். அவர்கள் தங்களது கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் நாங்கள் நல்ல அணையை உருவாக்க முயற்சிக்கிறோம். சீனியர் வீரர்கள் ஜூனியர் வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகளைக் கொடுக்கிறோம். அவர்கள் வேகமாக கற்கும் போது அவர்களுக்கு நல்லது நடக்கும்” என்று கூறினார்.